TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்! என்னென்னு தெரியுமா?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 9,491 காலி பணியிடங்களுக்கு 15.8 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 காலியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர்.
முதலில் 6,244 காலிப்பணியிடங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று 3 முறை அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9,491 காலி பணியிடங்கள் உயர்த்தப்பட்டன.
இந்நிலையில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட செய்திக்குறிப்பில்:- கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ( Onscreen Certificate Verification ) மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் நவம்பர் 7ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 6 வேலை நாட்களில் இப்பட்டியல் தேர்வாணையத்தால் விரைவாக வெளியிடப்பட்டுள்ளது.