தமிழ்நாடு யாருடன் போராடும்? முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி!
வள்ளலாரின் பிறந்தநாள் விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறும் 'தமிழ்நாடு போராடும்' என்ற முழக்கத்தை சுட்டிக்காட்டி, 'தமிழ்நாடு யாருடன் போராடும்?' என்று கேள்வி எழுப்பினார்.

வள்ளளால் விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என அடிக்கடி கூறிவரும் நிலையில், தமிழ்நாடு யாருடன் போராடும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அமரர் வள்ளலாரின் 202-வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார்.
வள்ளலாருக்கு மரியாதை இல்லை
“வள்ளலாருக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை இன்னும் முழுமையாகக் கிடைக்காதது வருத்தமளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமரச சன்மார்க்கத்தை கடைப்பிடித்து வாழும் ஒரு சன்மார்க்கி. ஆனால், தமிழகத்தின் தற்போதைய நிலை வருத்தமளிப்பதாக உள்ளது.” என்று ஆளுநர் ரவி கவலை தெரிவித்தார்.
மேலும், "தமிழ்நாட்டில் தலித் சமுதாயத்திற்கான அடிப்படை உரிமை இன்றும் மிகவும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இத்தனை அறிவுள்ள ஒரு சமுதாயம் எப்படி ஏற்றத்தாழ்வுடன் இருக்க முடியும் என்று நான் சிந்திக்கிறேன். அப்போது வள்ளலார் கூறியதுதான் என் நினைவுக்கு வருகிறது." எனவும் ஆளுநர் கூறினார்.
தமிழ்நாடு யாருடன் போராடும்?
“தமிழகத்திற்கு எதிராக யாரும் செயல்படவில்லை. இங்கே எந்த சண்டையும் இல்லை. ஆனால், நான் தமிழகத்தில் பயணிக்கும் இடமெங்கும் சுவர்களில், 'தமிழ்நாடு போராடும்' என்று எழுதியுள்ளனர். தமிழ்நாடு யாருடன் போராடும்?” எனக் கேள்வி எழுப்பிய ஆளுநர், தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
முதல்வரிடம் மறைமுக கேள்வி
சமீபகாலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுநிகழ்ச்சிகளில் பேசும்போது, "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்", "வென்று காட்டுவோம்", "தமிழ்நாடு போராடும்", "தமிழ்நாடு வெல்லும்" என்று தொடர்ந்து பேசி வருகிறார். இந்தச் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாகக் கேள்வி கேட்கும் வகையில், "தமிழ்நாடு யாருடன் போராடும்?" என்று பொதுவெளியில் கேள்வி எழுப்பியது அரசியல் அரங்கில் கவனத்தைப் பெற்றுள்ளது.