பல லட்சங்களில் சம்பாதிக்க வாய்ப்பு.! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் திட்டம்- உடனே விண்ணப்பிங்க
தமிழக அரசு சார்பாக பல்வேறு மக்கள் நல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பல லட்சங்களில் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நிதி உதவி திட்டம் முதல் மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்குவது என செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் இருந்தாலும் மருந்துகள் பெரும்பாலும் தனியார் மெடிக்கல்களில் தான் வாங்கும் நிலை உள்ளது. இதனால் பல ஆயிரம் ரூபாய்கள் செலவு ஏற்படுகிறது. எனவே குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
முதல்வர் மருந்தகம்
இந்தநிலையில் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுதந்திர தினவிழா உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் மருந்தகம் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது மேலும் மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.
medical shop
குறைந்த விலையில் மருந்துகள்
முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B-Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
ஜனவரி முதல் அறிமுகம்
தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்