- Home
- Tamil Nadu News
- கோர விபத்து! பஸ்ஸே இப்படி அப்பளம் போல் நொறுங்கி போயிருக்குன்னா! 17 பயணிகளின் கதி என்ன?
கோர விபத்து! பஸ்ஸே இப்படி அப்பளம் போல் நொறுங்கி போயிருக்குன்னா! 17 பயணிகளின் கதி என்ன?
ஆம்பூரில் கொல்கத்தாவிலிருந்து வந்த லாரி அரசு பேருந்து மீது மோதியதில் 17 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லாரி அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று பேரணாம்பட்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது கொல்கத்தாவிலிருந்து ஆம்பூருக்கு தோல் பொருட்கள் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் அரசு பேருந்து சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு தோல் தொழிற்சாலை சுவரின் மீது மோதி நின்றது.
17 பேர் படுகாயம்
இந்த விபத்தில் அரசு பேருந்து மற்றும் லாரி முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர், அரசு பேருந்தில் பயணம் செய்த காலணி தொழிற்சாலையில் பணிபுரியம் பெண் தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் 3 பெண் தொழிலாளர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கோர விபத்து தொடர்பாக உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து விபத்தில் சிக்கிய அரசு பேருந்து மற்றும் லாரியை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்யப்பட்டது. 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விபத்து நடக்கும் முன்பே முன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.