- Home
- Tamil Nadu News
- ஒரே ஆண்டில் அடுத்தடுத்து உயிர் பலி.! திமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் தொடரும் சோகம்- நடந்தது என்ன?
ஒரே ஆண்டில் அடுத்தடுத்து உயிர் பலி.! திமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் தொடரும் சோகம்- நடந்தது என்ன?
DMK: முன்னாள் விக்கிரவாண்டி திமுக எம்எல்.ஏ புகழேந்தி இறந்து ஓராண்டு ஆன நிலையில், அவரது பேரன் ராமதாஸ் சாலை விபத்தில் உயிரிழந்தார். நண்பர்களுடன் சாலையோரம் மது அருந்திக்கொண்டிருந்தபோது, மதுபோதையில் வந்த கார் மோதியதில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

பொன்முடியின் தீவிர விசுவாசி
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அத்தியூர் திருவாதித்தினையை சேர்ந்தவர் புகழேந்தி விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தீவிர விசுவாசி. 1973-ம் ஆண்டு கிளைக் கழகச் செயலாளராக கட்சியில் சேர்ந்த இவர், 1980-86 காலகட்டங்களில் மாவட்டப் பிரதிநிதியாக இருந்தார். 1989-ல் பொன்முடி முதல் முறையாக விழுப்புரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்காக கடுமையாக தேர்தல் பணி செய்தவர். அதற்கு நன்றிக்கடனாக இவருக்கு 1996-ல் கோலியனூர் ஒன்றிய சேர்மன் பதவியையும் 2006-ம் ஆண்டு இவரின் மருமகளுக்கு சேர்மன் பதவியையும் வழங்கி பொன்முடி அழகு பார்த்தார்.
புகழேந்தி
மேலும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளராகவும் விக்கிரவாண்டி திமுக ஒன்றியச் செயலாளராக 3 முறை பதவி வகித்துள்ளார். 2016 நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலேயே விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட புகழேந்தி வாய்ப்பு கேட்டிருந்தார். அப்போது வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ ராதாமணி மறைவை அடுத்து 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட புகழேந்தி தோல்வியை தழுவினார்.
அன்னியூர் சிவா
இருப்பினும் புகழேந்தியின் உழைப்பின் மீது நம்பிக்கைக் கொண்ட பொன்முடி 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புகழேந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினார். அதனை பயன்படுத்திக் கொண்ட புகழேந்தி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் விழுப்புரம் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக 2024ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி புகழேந்தி (71) உயிரிழந்தார். அவரை தொடர்ந்து, இடைத்தேர்தல் நடத்தப்பட்டு திமுகவை சேர்ந்த அன்னியூர் சிவா எம்.எல்.ஏ. ஆனார்.
மறைந்த எம்எல்ஏ புகழேந்தியின் பேரன்
மறைந்த எம்.எல்.ஏ ஆர்.புகழேந்தியின் பேரன் ராமதாஸ் (35). இவர் வேலியாம்பாக்கம் பகுதியில் திமுக கிளைச் செயலராளராக இருந்து வருகிறார். இந்நிலையில், ராமதாஸ் நேற்று இரவு தனது நண்பர்களான வி.பாளையத்தை சோ்ந்த தீனா (எ) சந்துரு (36), கொட்டப்பக்கத்துவேலி பகுதியைச் சோ்ந்த திருவேங்கடம் (45) ஆகியோருடன் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு சேவை சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஒன்றாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் ராமதாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும் இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
போலீஸ் விசாரணை
இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதில், தீனா என்ற சந்துரு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மதுபோதையில் காரை அதிவேகத்தில் இயக்கியதே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த நரேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் திமுக எம்.எல்.ஏ உயிரிழந்த ஒரே ஆண்டில் பேரனும் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.