மக்களே உஷார்! சென்னைக்கு அதித கனமழைக்கான எச்சரிக்கை! டெல்டா வெதர்மேன் அலர்ட்!
டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே இது கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கிய கனமழை
இலங்கையில் ருத்தரதாண்டவம் ஆடிய டிட்வா புயல் தமிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால் டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னையை நோக்கி நகர்ந்து வந்த நிலையில் தலைநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. எதிர்பாராத பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இது சென்னை கிழக்கு–தென்கிழக்கில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்
இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில்: கடந்த 18 மணி நேரமாக சென்னைக்கு கிழக்கே 40 கி.மீ. தொலைவில் ஒரே இடத்தில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். இன்று நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு ரெட் அலர்ட்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை தொடரும். அதேநேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிககனமழை முதல் அதித கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. தரைக்காற்று அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும் அவ்வப்போது 50 கிமீ வேகத்திற்கு செல்லலாம் என தெரிவித்துள்ளார்.
எண்ணூரில் அதிகபட்ச மழை
சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் பாரிமுனை, எண்ணூர் 26 செ.மீ., ஐஸ் ஹவுஸ் 23 செ.மீ., பேசின் பிரிட்ஜ், மணலி புது நகரம் 21 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சென்னையில் சராசரியாக 13 செ.மீ. அளவிற்கு மழை பொழிவு இருந்ததாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

