- Home
- Tamil Nadu News
- அடேங்கப்பா... மகளிருக்காக கொத்து கொத்தான சூப்பர் திட்டங்கள்! லிஸ்ட் போட்டு அசத்தும் தமிழக அரசு!
அடேங்கப்பா... மகளிருக்காக கொத்து கொத்தான சூப்பர் திட்டங்கள்! லிஸ்ட் போட்டு அசத்தும் தமிழக அரசு!
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களின் சமூகநீதி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை வெளியிட்டுள்ளார். இக்கொள்கையின் கீழ் விடியல் பேருந்து திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள்.

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021இல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மகளிர் சமுதாய மேம்பாட்டிற்குப் பல்வேறு புரட்சிகரமான புதிய பல திட்டங்களை அறிமுகப்படுத்தி மகளிர் சமுதாயத்தை உயர்த்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024
சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை மதிப்பிட இயலும்; பாலின வேறுபாடுகளைக் களைந்திடவும், பெண்களுக்கான சமூகநீதி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திடும் வகையிலும், பெண்களுக்கு உரிய அங்கீகாரம், சமூகநீதி, பாலின சமத்துவம், ஆகியவற்றை அளித்திடும் வகையிலும், தமிழ்நாடு அரசின் சார்பில் “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை” 2024-ஐ முதலமைச்சர் அவர்கள் 21.2.2024 அன்று வெளியிட்டு மகளிர் உரிமைக்கு வழிவகுத்துள்ளார்கள்.
முதலமைச்சர் விடியல் பேருந்து திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கோட்டைக்கு வந்து முதன் முதல் ஆணை பிறப்பித்த 5 திட்டங்களில் ஒன்று விடியல் பயணத்திட்டம். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்கள் ஆகியோர்க்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்தில் இது வரையில் 682.02கோடி முறை பயணம் செய்துள்ளனர். திருநங்கைகள் 36.89 இலட்சம் முறையும், , மாற்றுத்திறனாளிகள் 3.78 கோடி முறையும் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் பயனாக மகளிர் மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்று மகிழ்கின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
ஏழை மக்களின் குடும்பங்களிலும், கிராமப் பொருளாதாரத்தைச் சுமக்கும் முதுகெலும்பாகப் பெண்கள் திகழ்கிறார்கள். பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கும் நோக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தான், தமிழ்நாடு முதலமைச்சர் இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று கூறாமல் மகளிர் உரிமைத் தொகை என்று பெயரிட்டுள்ளார்கள். இத்திட்டத்தில் இதுவரை 1 கோடியே 15 இலட்சம் மகளிர் மாதந்தோறும் ரூ1,000 உரிமைத் தொகையாக அவரவர் வங்கிக் கணக்குகளில் பெற்று வருகிறார்கள். இந்த மகளிர் உரிமைத் தொகை இதுவரை கிடைக்காத தகுதிவாய்ந்த மகளிர் அனைவருக்கும் வழங்கிட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
புதுமைப் பெண் திட்டம்
முதலமைச்சர் அவர்களின் ஒரு புரட்சிகரமான திட்டம் இது. 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பயின்ற மாணவியர், தடையின்றி உயர் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு / ஒன்றிய அரசு சார்ந்த, மருத்துவக் கல்லூரி உட்பட உயர் கல்வி நிறுவனங்களில், இளநிலைப் பட்டப் படிப்பில் சேரும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகின்றது. நேரடிப் பணப் பரிமாற்ற முறைப்படி, இந்த உதவித்தொகையை இதுவரை 4.95,000, மாணவியர் நேரடியாகத் தம் வங்கிக் கணக்குகளில் பெற்று முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தின் காரணமாகப் பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சேரும் மாணவியர் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது என மாநில திட்டக் குழுவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
பணிபுரியும் மகளிருக்கு தோழி விடுதிகள்
மகளிர் படித்து முடித்துச் சொந்த ஊரை விட்டுவந்து வெளியூரில் தங்கிப் பணிபுரிவதில் பல இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. இதைக் களையும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பணிபுரியும் மகளிர்க்காக தோழி விடுதிகள் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஆங்காங்கே தோழி விடுதிகளை ஏற்படுத்தி வருகிறார்கள். 13 தோழி விடுதிகள் 1303 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும் 14 இடங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, அடையாறு (சென்னை) ஆகிய 7 இடங்களில் 476 படுக்கை வசதிகள் கொண்ட விடுதிகள் ரூ.4.21 கோடியில் புதுப்பிக்கப்பட்டு 13.7.2023 முதல் செயல்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவிக்குழு கடன் உச்சவரம்பு அதிகரிப்பு
திராவிட நாயகர் அவர்கள் ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கிடும் கடன் உச்ச வரம்பை ரூ.12 இலட்சம் என்பதில் இருந்து ரூ.20 இலட்சமாக உயர்த்தி உத்தரவிட்டார்கள். 2016 முதல் 2020 வரை நான்கு ஆண்டுகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ. 39,468.88 கோடி. ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் 2021 -முதல் 2025 வரை வழங்கப்பட்டுள்ள கடன் ரூ. 1,12,299 கோடி சத்துணவுத் திட்ட மகளிர் மேம்பாட்டில் திராவிட நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்க்கான ஓய்வு வயதினை 58லிருந்து 60 ஆக உயர்த்தி, அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
மகப்பேறு விடுப்பு உயர்வு
மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் 31.3.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,755.99 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 1,17,617 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 15,88,309 மகளிர் பயன்பெற்றுள்ளனர்.
மகப்பேறு விடுப்பு உயர்வு
அரசுப் அலுவகங்களில் பணி புரியும் மகளிர் ஆசிரியைகளின் மகப்பேறு விடுப்பு 9 மாதம் என்பது 12 மாதங்களாக 2021ஆம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படுகிறது.
காவல்துறையில் பெண்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பெண் காவலர்கள், முக்கியப் பிரமுகர்களின் வருகையின்போது வீதிகளில் நீண்ட நேரம் நிற்கவைப்பதைத் தடுத்து, அவர்களுக்கு இலகுவான பணிகள் வழங்க ஆணையிட்டு, அவ்வாறே வழங்கப்படுகிறது தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்புத் தபால் உறை வெளியிடப்பட்டு, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவள் (AVAL - Avoid Violence Through Awareness and Learning) திட்டம் அறிமுக செய்யப்பட்டுள்ளது.
தொழில் முனைவோராக மகளிர்
பெண்கள் கல்வியோடு நின்றிடாமல் அவர்களுக்குத் தாமே சுயமாகத் தொழில் தொடங்கும் வாய்ப்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். Start Up எனப்படும் புத்தொழிலை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசாங்கம் மானிய நிதி அளிக்கும் TANSEED (Tamil Nadu Startup Seed Grand Fund) என்கிற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் தொகுப்புகளும் அளிக்கப் படுகின்றன. பெண் தொழில் முனைவோரின் புத்தொழில்களுக்கு 15 இலட்சம் ரூபாய் வரை மானிய நிதி வழங்கி ஊக்கமளிக்க படுகிறது. இந்திய அளவில் பணிபுரியும் மகளிரில் 41% மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
