- Home
- Tamil Nadu News
- திமுக முக்கிய தலைவரின் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை! ரொக்கம் எவ்வளவு? நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்
திமுக முக்கிய தலைவரின் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை! ரொக்கம் எவ்வளவு? நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்
திமுகவின் மாநில விவசாய செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் பெரும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சுமார் 300 சவரன் நகைகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும், திமுகவின் மாநில விவசாய செயலாளராகவும் இருப்பவர் ஏ.கே.எஸ்.விஜயன். இவரது வீடு தஞ்சையில் உள்ள சேகரன் நகரில் உள்ளது. இவரது குடும்பத்தினர் இங்கு தங்கியுள்ளனர். இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றிருந்த நிலையில் இன்று வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நகைகள் கொள்ளை
உடனே உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள நகைகள் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
300 சவரன் அளவிற்கு திருடி போயிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 1999ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை நாகை எம்.பி.யாக இருந்தவர் ஏ.கே.எஸ்.விஜயன். காவிரி டெல்டா மாவட்டங்களின் திமுகவின் முக்கிய பிரமுகர்களில் இவர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

