- Home
- Tamil Nadu News
- விஜய் NDA கூட்டணியில் இணைந்தாலும் ஸ்டாலினை வீழ்த்துவது கடினம்! தேமுதிக, பாமக திமுக பக்கம்? சொல்வது யார் தெரியுமா?
விஜய் NDA கூட்டணியில் இணைந்தாலும் ஸ்டாலினை வீழ்த்துவது கடினம்! தேமுதிக, பாமக திமுக பக்கம்? சொல்வது யார் தெரியுமா?
KC Palanisamy: விஜய்யின் தவெக கூட்டணியை நம்பி, கட்சியின் சுயபலத்தை எடப்பாடி குறைத்து மதிப்பிடுவதாக அவர் விமர்சித்துள்ளார். அதிமுக தனித்து நின்று வெல்லும் வலிமையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டணி பலத்தோடு இருக்கிற திமுக தங்களை இன்னும் பலப்படுத்திக்கொண்டே வருகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அதிமுகவை பலவீனப்படுத்துவதை மட்டுமே செய்கிறார் என முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில்: அதிமுக-பாஜக கூட்டணி அமைந்த போது, அது ஓரளவு வெற்றிக்கூட்டணியாக பார்க்கப்பட்டது. அதிமுக ஒன்றிணைந்தோ அல்லது விலக்கப்பட்ட அதிமுகவினரை கூட்டாக ஒன்றிணைத்தோ வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கை அதிமுக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் இருந்தது. அந்த நேரத்தில் விஜய்க்கு 10% வாக்குகள் தான் கிடைக்கும், அதிலும் 6% திமுக வாக்குகளாக தான் இருக்கும் அது அதிமுக வெற்றியை பாதிக்காது என்பதாக தான் பேசப்பட்டது. அந்த நேரத்தில் விஜய்யுடன் கூட்டணியும் இல்லை எந்த உறவும் இல்லை என்பதில் உறுதியாக இருந்தார். அப்பொழுது களம் அதிமுகவுக்கு சாதகமாக இருந்தது.
ஆனால், அந்த சூழ்நிலையில் அதிமுகவை ஒன்றிணைக்க முடியாது என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்தார், அதனுடைய தாக்கத்தை குறைப்பதற்காக கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயோடு கூட்டணி என்கிற அஸ்திரத்தை எடுத்தார், தவெக தரப்பில் உறுதிப்படுத்தப்படாமலே "பிள்ளையார் சுழி போட்டாச்சு" என்றெல்லாம் பேசினார், அவர்கள் வேறு வழியின்றி கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என்று நம்பினார். உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு போன்றோர் வழியென சென்று தவெகவிடம் வேண்டுகோள் வைத்தார்கள்.
இதை தவெகவின் பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா "எதிர்க்கட்சி அவர்களோடு வந்து சேருமாறு எங்களை அழைக்கிறார்கள்" என்று கேவலமாக விமர்சிக்குமளவு எடப்பாடியின் செயல்கள் ஆகிவிட்டது. அதிமுக அவர்களுக்கு உதவியது என்பதை கூட மறந்துவிட்டது அதிமுகவை அசிங்கப்படுத்தியிருக்கிறார் ஆதவ். ஆனால், அவர் தான் விஜய்யோடு கூட்டணிக்கு ஏற்பாடு செய்துவிடுவார் என்று பெரிதும் நம்பிக்கொண்டு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் "கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று பேசிக்கொண்டிருக்கிறார்.
தன்னை தானே தோற்கடித்துக்கொள்கிற யுக்தி எடப்பாடி பழனிசாமியிடம் தான் உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் 10.5% இட ஒதுக்கீடு கொடுக்காமல் இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்திருக்கலாம், இந்த முறை எடப்பாடியே கிட்டத்தட்ட தன்னால் வெற்றிபெற முடியாது. விஜய் கூட்டணிக்கு வந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்கிற ஒரு பிம்பத்தை கட்டமைத்துவிட்டார்.
இவர்கள் எல்லோரும் முன்னெடுப்பது, திமுக ஆட்சியை அப்புறப்படுத்த எங்களோடு இணையுங்கள் என்பது தான். ஆனால், விஜய்யின் நோக்கம் அது மட்டும் அல்ல அவர் முதல்வர் ஆகவேண்டும் அவர் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதும் தான், அதை மறந்துவிட்டார்கள். ஒருவேளை விஜய்யே NDA கூட்டணியில் இணைந்தாலும் வெல்லுகிற வியூகத்தை திமுக கட்டமைத்துக்கொண்டு வருகிறது. தேமுதிக, ராமதாஸ் போன்றவர்கள் திமுக பக்கம் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதிமுக சார்ந்தவர்கள் பலரையும் திமுக பக்கம் இழுக்கிறார்கள், அதுபோக இன்றைய Hindu பத்திரிகையில் வந்த செய்தியின்படி OPS கூட திமுக பக்கம் செல்லலாம் என்பதாக இருக்கிறது.
ஏற்கனவே கூட்டணி பலத்தோடு இருக்கிற திமுக தங்களை இன்னும் பலப்படுத்திக்கொண்டே வருகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அதிமுகவை பலவீனப்படுத்துவதை மட்டுமே செய்கிறார். இனிவரும் காலகட்டங்கள் மிக முக்கியம் கட்சியின் பிம்பம் மக்கள் மத்தியில் உயர்த்தப்பட வேண்டும். விஜய் தனித்தே போட்டியிட்டாலும் எதிர்த்து நின்று வெற்றிபெறுகிற வலிமை அதிமுகவுக்கு உண்டு அந்த வலிமையை நிரூபித்தாக வேண்டும் இதை நோக்கி பயணிப்பாரா எடப்பாடி பழனிசாமி? என கேள்வி எழுப்பியுள்ளார்.