- Home
- Tamil Nadu News
- ஓபிஎஸ் சசிகலாவை சேர்த்துக்கவே முடியாது! செங்கோட்டையன் கோரிக்கை நிராகரித்த கையோடு ஆக்ஷனில் இபிஎஸ்!
ஓபிஎஸ் சசிகலாவை சேர்த்துக்கவே முடியாது! செங்கோட்டையன் கோரிக்கை நிராகரித்த கையோடு ஆக்ஷனில் இபிஎஸ்!
அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கெடுவுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியின் பிடிவாத குணமே காரணம். பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்று சேர்ந்தால் வெற்றி பெற முடியும் என்பதால் ஓபிஎஸ் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார் எனவும், எந்த பொறுப்பும் வேண்டாம் என அறிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லையென திட்டவட்டமாக கூறிவருகிறார்.
இந்நிலையில் அதிமுக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள். அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும். அவர்கள் அதிமுகவில் நிபந்தனையின்றி இணைந்து செயல்பட தயாராக இருக்கின்றனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் தான் நம்மால் வெல்ல முடியும் என்பது எம்ஜிஆர் சொல்லிக் கொடுத்த பாடம் இபிஎஸ் அறிவுரை வழங்கி இருந்தார்.
செங்கோட்டையன் பேச்சுக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தில் கூட செங்கோட்டையன் தொடர்பாக பேசாமல் அமைதி காத்து வந்தார். செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ள நிலையில் கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 2 மணிநேரமாக நடைபெற்ற ஆலோசனை நிறைவு பெற்றது.
அப்போது எடப்பாடி பழனிசாமி பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இபிஎஸ் எச்சரித்ததாகவும் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.