- Home
- Tamil Nadu News
- ஸ்காட்லாந்து இணையான தமிழக போலீஸ் நிலை இப்படி ஆயிடுச்சே.! திமுக அரசை இறங்கி அடித்த எடப்பாடி
ஸ்காட்லாந்து இணையான தமிழக போலீஸ் நிலை இப்படி ஆயிடுச்சே.! திமுக அரசை இறங்கி அடித்த எடப்பாடி
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, காவல்துறையின் செயல்பாடு குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். காவல்துறையின் செயல்பாடு கேள்விக்குறியாகி இருப்பதாகவும், பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

EPS accused of poor law and order in Tamil Nadu : காவல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒரு மாநிலத்தில் காவல்துறை எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறது என்பதை பொறுத்துதான் அம்மாநிலத்தின் வளர்ச்சி இருக்கும் என குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சியில் இந்தியாவில் அமைதியான, பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் இருந்ததாகவும், குறிப்பாக தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருந்ததாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி குறிப்பிட்டார். தமிழக காவல்துறையில் காவலர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருப்பதால், காவலர்கள் அனைவரும் பணிச்சுமையில் இருப்பதாக தெரிவித்தார்.
tamilnadu police
தமிழகத்தில் காலிப்பணியிடம்
திமுக ஆட்சிக்கு வந்தால் 3. 5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்து ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை சுமார் 72 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி, காலிப்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பினால் தான் அரசு ஊழியர்களின் பணிச்சுமை என்பது நீங்கும் என தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக தமிழக காவல்துறை செயல்பட்டு வந்த நிலையில், தற்போது காவல்துறையின் செயல்பாடு கேள்விக்குறியாகி இருப்பதாக தெரிவித்தார்.
கள்ளத்தனமாக மது விற்பனை
தற்போதைய காவல்துறை இரு பிரிவாக செயல்படுவதாகவும், அதில் ஒன்று வேண்டியவர்களுக்கு ஒரு மாதிரியும், வேண்டாதவர்களுக்கு ஒரு மாதிரியும் காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். டாஸ்மாக் மதுபானக்கூடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, காவல்துறையின் அனுமதி இல்லாமல் இதுபோல் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய முடியாது என குற்றம் சாட்டினார். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே மதுபானக்கூடங்களில் மது விற்கப்படுவதை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கையை எடுத்து உள்ளது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
பொதைப்பொருள் கடத்தல்
பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகளில் பல கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மாணவர்கள் செய்யும் செயல்களால் பொதுமக்கள் கடுமையாக பாதித்திருப்பதாக தெரிவித்தார்.
பக்கத்து மாநிலங்களில் இருந்து ரயில், கப்பல் மூலமாக போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வருவதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழக அரசு ஜீரோ
குறிப்பாக தமிழக எல்லைகளில் வாகன தணிக்கை செய்யப்பட்டு பின்னரே வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். போதைக்க பொருளை கட்டுப்படுத்த 2. Zero, 3.Zero போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்குறதே தவிர, போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு ஜீரோவாக தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக குறிப்பிட்ட எடப்பாடி கே பழனிச்சாமி,
அண்ணா பல்கலை. மாணவி- குற்றவாளிக்கு தண்டனை
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிக்கு தண்டனை அளிக்கப்படாமல் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை விசாரித்து வந்த அதிகாரி ஒருவர் யாரோ கொடுத்த அழுத்தத்தால் விசாரணையில் இருந்து விலகி இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரத்தில் உரிய குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படும் என தெரிவித்தார்.