- Home
- Tamil Nadu News
- தவெக அங்கீகாரத்தை ரத்து செய்யணும்! உயர்நீதிமன்றம் சென்ற வழக்கறிஞர்! ட்விஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்!
தவெக அங்கீகாரத்தை ரத்து செய்யணும்! உயர்நீதிமன்றம் சென்ற வழக்கறிஞர்! ட்விஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்!
தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக பலியாயினர். இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், இது குறித்து முழுமையாக விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணை அமைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தவெக உச்சநீதிமன்றம் சென்றது.
உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
மேலும் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட சில குடும்பத்தினரும் கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மனுதாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதுடன், அதனை கண்காணிக்க ஒரு குழுவையும் அமைத்தது. மேலும் சிறப்பு புலனாய்வு விசாரணை மற்றும் தமிழக அரசின் ஒரு நபர் ஆணைய விசாரணை ஆகியவற்றுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் கரூர் சம்பவத்துக்கு காரணமான தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ''அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டுவது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது. ஆனால் தவெக கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் பங்கேற்று உயிரிழந்துள்ளனர்.
நெறிமுறைகளை வகுக்க வேண்டும்
சட்ட விதிகளை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. ஆகையால் தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார். மேலும் அரசியல் கட்சிகள் கூட்டங்களில் பெண்கள், குழந்தைகள் பங்கேற்காதபடி நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், ''தவெக அங்கீகரிக்கப்பட்ட அட்சி அல்ல; ஆகவே அந்த கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை வைக்க முடியாது'' என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.