டிஎஸ்பி சுந்தரேஷன் ஐசியூவில் திடீர் அனுமதி.! காரணம் என்ன.?
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து, வாகனம் பறிக்கப்பட்டதால் நடந்தே அலுவலகம் சென்ற வீடியோ வைரலானது. இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை ஐசியூவில் சிகிச்சைக்காக அனுமதி

மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி எம். சுந்தரேசன் தனது உயர் அதிகாரிகளால் மனரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், அரசு வாகனம் எந்த காரணமும் இல்லாமல் பறிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்த நிலையில், தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மயிலாடுதுறையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றிய 9 மாதங்களில் 1,200-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து, 700 பேரை கைது செய்ததாகவும், 23 சட்டவிரோத மதுக்கடைகளை மூடியதாகவும் கூறினார்.
மேலும் எஸ்பி ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகளான காவல்துறை உளவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் செந்தில்வேல் மற்றும் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆஷிர்வாதம் ஆகியோர் ஊழலில் ஈடுபடுவதாகவும், தன்னை அவர்களுக்கு இணங்கும்படி அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
டிஎஸ்பி சுந்தரேசனின் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவை உண்மைக்கு புறம்பானவை என்றும், அவரது வாகனம் முதலமைச்சர் ஸ்டாலின் வருகையின் போது தற்காலிகமாக விஐபி பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டதாகவும், மாற்று வாகனம் வழங்கப்பட்டதாகவும் கூறினார். இதனையடுத்து தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நடத்திய விசாரணையில், சுந்தரேசன் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறியதாகவும், அனுமதியின்றி ஊடகங்களில் பேட்டியளித்ததாகவும், உயர் அதிகாரிகள் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுந்தரேசனை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதே நேரத்தில் டிஎஸ்பி சுந்தரேசனுக்கு எதிராக பல்வேறு புகார்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 2009-2011 காலகட்டத்தில் லஞ்சம் வாங்கியது, குற்றவியல் பின்னணி உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க உதவியது, மற்றும் ஒரு பெண்ணை தவறான வழக்கு பதிவு செய்ய கட்டாயப்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் மூன்று முறை ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேஷன் சென்னையில் காவல்துறை அதிகாரிகளை சந்திக்க வந்திருந்த நிலையில் இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.