- Home
- Tamil Nadu News
- தீபாவளி தொடர் விடுமுறை.. 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எந்தெந்த தேதிகள்? முழு விவரம்!
தீபாவளி தொடர் விடுமுறை.. 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எந்தெந்த தேதிகள்? முழு விவரம்!
தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. எந்தெந்த தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும்? என்பது குறித்து பார்ப்போம்.

தீபாவளி சிறப்பு பேருந்துகள்
நாடு முழுவதும் வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாப்படுகிறது. தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். ஏற்கெனவே ரயில்களில் டிக்கெட்டுகள் புக்காகி விட்ட நிலையில், தமிழக அரசு எப்போது சிறப்பு பேருந்துகளை அறிவிக்கும்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ''தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பேருந்துகள் வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலான 4 நாட்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து மட்டும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு 14,268 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதற்காக 15,129 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
பிற ஊர்களில் இருந்து எத்தனை பேருந்துகள்
தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், ''சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையை தவிர்த்து பிற ஊர்களில் இருந்து மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக 6,110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல இதுவரை 2 லட்சம் பேர் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
பொதுமக்கள் முன்பதிவு செய்வதற்கு வசதியாக கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்களும், கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.