Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே
Diwali Special Train: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, தமிழக அரசு சிறப்பு பேருந்துகளையும், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்குகிறது. தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு ஏசி சிறப்பு ரயில் இயக்கப்படும்.
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தினத்தில் உறவினர்களுடன் உற்சாகமாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல பயணித்து வருகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் இருந்து தொழில் கல்வி வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 14,086 சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் சென்னையின் அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதேபோல தெற்கு ரயில்வே துறை சார்பாகவும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தென் மாவட்ட மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக நாளை (அக்டோபர் 30) தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதாவது தாம்பரம் - நாகர்கோவில் ஏசி எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, நாங்குநேரி, வள்ளியூர் வழியாக அதிகாலை 4.40க்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
அதே ரயில் மறுமார்க்கத்தில் அக்டோபர் 31ம் தேதி காலை 8.45க்கு புறப்பட்டு இரவு 9.55க்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த ரயில் முழுவதும் ஏசி வசதி கொண்டதாகும். 14 ஏசி கோச்களும் 2 லக்கேஜ் கம் பிரேக் வேன்களும் கொண்டதாக இந்த ரயில் இருக்கும். இந்த ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.