தீபாவளி பண்டிகை.. வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்- தேதி குறித்த தமிழக அரசு
தமிழக அரசு, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 5 மற்றும் 6 தேதிகளில் இந்த சிறப்பு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 37 ஆயிரம் முழு நேரம் மற்றும் பகுதி நேர நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் 2 கோடியே 29 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.
இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டையின் தன்மையை பொறுத்து உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அரசி, சக்கரை, பாமாயில், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.
மேலும் பொங்கல் பண்டிகையின் போது பரிசு பொருட்களும், இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகளும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வயது முதிந்தவர்கள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் உணவு பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் வீடுகளுக்கே சென்று உணவுப்பொருட்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது. அந்த வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது.
இது தொட,ர்பாக தமிழக அ,ரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் மாதத்தின் 5 மற்றும் 6 தேதிகளில் வீடு தேடி குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.