- Home
- Tamil Nadu News
- தனியார் வசமாகும் தூய்மைப் பணி: அரசுக்கு கிரீன் சிக்னல் வழங்கிய கோர்ட் - குமுறும் போராட்டக்காரர்கள்
தனியார் வசமாகும் தூய்மைப் பணி: அரசுக்கு கிரீன் சிக்னல் வழங்கிய கோர்ட் - குமுறும் போராட்டக்காரர்கள்
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் கொள்கை முடிவுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் வசமாகும் தூய்மை பணி
சென்னை மாநகராட்சியில் 2 மண்டலங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ள அரசு கொள்கை முடிவு எடுத்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி அலுவலக வளாகம் அருகே 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், போராட்டத்தால் பொதுமக்கள் அந்த பகுதியை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகக் கூறி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றத்தில் முறையீடு
இந்நிலையில், தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்த தமிழக அரசு, தொழிலாளர்களின் பணி ஒருபோதும் பறிக்கப்படாது. நேரடி பணி வழங்குவதற்கு பதிலாக நிர்வாகக் காரணங்களுக்காக தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அரசின் கொள்கை முடிவு
மேலும் ஒப்பந்த நிறுவனம் தரப்பில், “தூய்மைப் பணியை தனியார் நிறுவனத்திடம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு. இதில் விதி மீறல் இல்லாத பட்சத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று வாதிட்டது. இரு தரப்பு விளக்கங்களையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி தூய்மைப் பணியாளர்களின் மனுவை முடித்து வைத்தனர்.
தொழிலாளர்களுக்கான பணி உத்தரவாதம்
முன்னதாக நீதிபதியின் தீர்ப்பில், “பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கப்படுவதை அரசு உறுதி படுத்த வேண்டும். மேலும் அரசு தரப்பில் வழங்கப்பட்ட ஊதியமே ஒப்பந்த நிறுவனத்தாலும் வழங்கப்படுகிறது என்பதையும் அரசு உறுதிபடுத்த வேண்டும் என்று உத்தரவி்ட நீதிபதி, தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.