- Home
- Tamil Nadu News
- ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் “மாமல்லன்” புதிய குடிநீர் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் “மாமல்லன்” புதிய குடிநீர் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (19.1.2026) செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் ரூ.342 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் நீர்த்தேக்கத்திற்கு “மாமல்லன்” என்று பெயர் சூட்டி, அடிக்கல் நாட்டி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாமல்லன் குடிநீர் தேக்கம்
கோவளம் உபவடிநிலப் பகுதியில் “மாமல்லன்” புதிய குடிநீர் நீர்த்தேக்கம் அமைக்கும் பணி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தையூர், மானமதி, சிறுதாவூர், காளவாக்கம், ஆமூர், பையனூர் உள்ளிட்ட 69 ஏரிகளின் உபரி நீர், உப்பளம் மற்றும் அரசுக்கு சொந்தமான காலி நிலம் வழியாக பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றப்பட்டு, இறுதியாக முட்டுக்காடு, கோகிலமேடு முகத்துவாரங்களில் கடலில் கலக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், நீர் வழங்கலை பரவலாக்கவும், 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடலில் கலக்கிறது
இப்புதிய நீர்த்தேக்கமானது சென்னை வடிநிலப்பகுதியில் உள்ள கோவளம் உபவடிநிலப் பகுதியில் அமையவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையே உள்ள 3010 ஏக்கர் உப்பளப் பகுதி உட்பட மொத்தம் 5161 ஏக்கர் அரசு நிலங்களில் அமைக்கப்படவுள்ளது.
தற்போது அப்பகுதியில் முட்டுக்காடு பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவிற்கு மட்டுமே பக்கிங்காம் கால்வாய் வழியாக உயர்ந்த அலையின் (High Tide) பொழுது கடல்நீர் உள்ளே வருகிறது. இவ்வாறாகவே கோகிலமேடு முகத்துவாரத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவிற்கு மட்டுமே பக்கிங்காம் கால்வாய் வழியாக உயர்ந்த அலையின் (High Tide) பொழுது பக்கிங்காம் கால்வாய் வழியாக கடல்நீர் உள்ளே வருகிறது. இதற்கு இடைப்பட்ட பகுதியில் பக்கிங்காம் கால்வாய் தூர்ந்து கடல்நீர் உள்வருவதில்லை. மேலும் மழைக்காலங்களில் இப்பகுதி முழுவதும் மழை நீர் மட்டுமே தேங்கி அதன்பின் கடலில் மெதுவாக கலக்கிறது.
170 மில்லியன் லிட்டர் குடிநீர்
புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கு 34 கி.மீ நீளத்திற்கு மண் கரை அமைக்கும் பணி, கோகிலமேடு முகத்துவாரத்திற்கு வெள்ள நீர் செல்வதற்கு ஏதுவாக நீர் தேக்கத்தின் தெற்கு பகுதியில் நீரொழிங்கி அமைத்தல், நீர் உள்வாங்குவதற்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கும் தேவையான நீரொழிங்கிகள் அமைத்தல், தேவைக்கு அதிகமான வெள்ள நீரீனை மேற்கு மற்றும் கிழக்கு புற வெளிப்புற வடிகால்கள் மூலம் முட்டுக்காடு மற்றும் கோகிலமேடு முகத்துவாரங்கள் மூலம் வெளியேற்ற வடிகால்கள் அமைக்கும் பணிகள் அமையவுள்ளன. மேலும், பக்கிங்காம் கால்வாய் திருவிடந்தையிலிருந்து மகாபலிபுரம் வரை முற்றிலுமாக சீரமைத்து கடல்நீர் வருவதற்கேற்ப புனரமைக்க உத்தேகிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் வாயிலாக நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை மக்களுக்கு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 13 இலட்சம் மக்கள் பயன்பெறுவர்.
நீர் பாதுகாப்பு விருதுகள்
மாமல்லன் நீர்தேக்க அடிக்கல் நாட்டு விழாவில், மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாத்து சிறப்பான முறையில் செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களான (NGO) - சிறு துளி, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை, எக்ஸ்னோரா சர்வதேச அறக்கட்டளை, எச்.சி.எல். அறக்கட்டளை, தன் அறக்கட்டளை, மெகா அறக்கட்டளை, ரோப் நிறுவனங்கள், டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை, வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதார பிரிவு, அண்ணா பல்கலைக் கழகம் - நீர்வள ஆதார மையம். பிரதான் அறக்கட்டளை, வனத்துக்குள் திருப்பூர், கோவை குளங்கள், பயோட்டா மண் அறக்கட்டளை, தர்மபுரி - ஆதி அறக்கட்டளை ஆகிய அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் சிறந்த நீர் பாதுகாத்தல் விருதுகளை (Best Water Conservation Award) வழங்கி சிறப்பித்தார்.

