அரசு மரியாதையோடு குமரி அனந்தனுக்கு இறுதி சடங்கு.! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் 93 வயதில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிப்பு.

Kumari Anandan body buried with state honors : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக பாஜகவின் முக்கிய தலைவராக இருக்ககூடிய தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன், இன்று அதிகாலை காலமானார். அவரதுக்கு வயது 93, அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டிய பெருமை இவரையே சாரும். அதனால்தான் தலைவர் கலைஞர் இதுகுறித்து குறிப்பிடும்போது, "தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழியை மாற்றி அமைத்துவிட்டார்" எனப் புகழாரம் சூட்டினார்.
Kumari Anandan death
தமிழே தன் மூச்சு என வாழ்ந்தவர் குமரி அனந்தன்
தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்கு வாழ்ந்திட்ட அவரது பெருவாழ்வைப் போற்றி, அவருக்கு நமது அரசின் சார்பில் கடந்த ஆண்டு 'தகைசால் தமிழர்' விருது வழங்கி பெருமை கொண்டோம்.
விடுதலை நாள் விழாவில் அந்த விருதினை நான் வழங்கியபோது, என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு வாஞ்சையோடு உறவாடிய அவரது நினைவு என் கண்களில் கண்ணீரைப் பெருக்குகிறது. ஏராளமான நூல்களையும் - எண்ணற்ற மேடைகளையும் கண்ட அவரது தமிழால் நம் நெஞ்சங்களில் அவர் என்றும் நிறைந்திருப்பார் என ஆறுதல் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
CM Stalin condolence
குமரி அனந்தன் குடும்பத்திற்கு ஆறுதல்
இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர், இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்ற செய்தியை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வேதனையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளதோடு, மறைந்த குமரி அனந்தன் அவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
state honors
அரசு மரியாதையோடு பிரியாவிடை
நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய அய்யா குமரி அனந்தன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் “தகைசால் தமிழர்” கடந்த ஆண்டு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்காக வாழ்ந்திட்ட அய்யா குமரி அனந்தன் அவர்களின் பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.