- Home
- Tamil Nadu News
- சென்னை டூ வேளாங்கண்ணி; நாகர்கோவில் டூ வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள்! எந்தெந்த தேதி? முழு விவரம்!
சென்னை டூ வேளாங்கண்ணி; நாகர்கோவில் டூ வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள்! எந்தெந்த தேதி? முழு விவரம்!
சென்னையில் இருந்தும், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் எந்தெந்த தேதியில் இயக்கம்? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.

Special Trains Announced To Velankanni
உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்நிலையில், வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி சென்னையில் இருந்தும், கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்தும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
சென்னை டூ வேளாங்கண்ணி சிறப்பு ரயில்
அதாவது சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியில் இருந்து தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் செப்டம்பர் 11 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06037) மறுநாள் காலை 07:35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5 மற்றும் செப்டம்பர் 12 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06038) மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும்?
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்தும் வேளாங்கண்ணி இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 27 மற்றும் செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் மாலை 3:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06115) மறுநாள் அதிகாலை 3:55 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில்
மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்:06116) மறுநாள் காலை 6:55 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரயில் நெய்யாற்றின்கரை, குளித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுண், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
எர்ணாகுளத்தில் இருந்தும் தென்காசி வழியாக சிறப்பு ரயில்
மேலும் எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், புனலூர், தென்காசி, விருதுநகர் வழியாக வேளாங்கணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. எர்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 27, செப்டம்பர் 3 மற்றும் செப்டம்பர் 10ம் தேதிகளில் இரவு 11.20 மணிக்குபுறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06061) மறுநாள் காலை 10:15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் செப்டம்பர் 11ம் தேதிகளில் மாலை 6.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06062) மறுநாள் காலை 11.55 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு எப்போது?
இந்த சிறப்பு ரயில் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், காயம்குளம், கொல்லம், கொட்டாரக்கரை, புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மானாமதுரை, அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராமபட்டிணம், திருத்துரைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேற்கண்ட சென்னை-வேளாங்கண்ணி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி மற்றும் திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஆகஸ்ட் 19) காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.