- Home
- Tamil Nadu News
- அடி தூள்.! சென்னை டூ ராமேஸ்வரம் இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.! தெற்கு ரயில்வே அசத்தலான பிளான்
அடி தூள்.! சென்னை டூ ராமேஸ்வரம் இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.! தெற்கு ரயில்வே அசத்தலான பிளான்
Chennai to Rameswaram Vande Bharat train : சென்னை - ராமேஸ்வரம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ரயில் பயண நேரத்தை 8 முதல் 9 மணி நேரமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து மக்கள் குவித்து வருகிறார்கள். ராமேஸ்வரத்தை சுற்றி பல ஆன்மிக இடங்களும், அழகிய கடற்கரை, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவிடம், பாம்பன் பாலம், புயலால் அழிந்து போன தனுஷ்கோடி என ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளது.
இதனை பார்க்கவே கூட்டம் கூடி வருகிறது. இந்த நிலையில் பாம்பன் ரயில் பாலம் பணி முடிவடைந்துள்ள நிலையில், ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரவு நேர ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், ராமேஸ்வரத்திற்கு சென்னையில் இருந்து பகல் நேர ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த வகையில் ராமேஸ்வரத்தில் புதிய ரயில் தடத்தில் மின் பாதை அமைக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகிறது. சேது சூப்பர் பாஸ்ட் ரயில் சென்னையில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 4.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேர்கிறது.
இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி வழியாக ராமேஸ்வரம் சென்று அடைகிறது. 11 மணி நேரம் பயண நேரமாக உள்ளது. மற்றொரு ரயிலான் ராமேஸ்வரம் - சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் இரவு 7.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு சென்று சேர்கிறது. இந்த ரயில் தாம்பரம், கடலூர், தஞ்சாவூர். திருச்சி வழியாக ராமேஸ்வரம் சென்று சேர்கிறது. இந்த ரயில் சுமார் 12 முதல் 12.30 மணி நேரம் பயணம் செய்கிறது.
எனவே விரைவாக ராமேஸ்வரம் செல்ல சுற்றுலா பயணிகள் மட்டுமில்லாமல் ராமநாதபுரம் மாவட்ட மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர். அந்த வகையில் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு காலையில் புறப்பட்டு இரவில் சென்னை வந்து சேரும் வகையில் தெற்கு ரயில்வே புதிய ரயில் சேவையை தொடங்கவுள்ளது.
அந்த வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 665 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 8 முதல் 9 மணி நேரத்தில் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வந்த பாரத் ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதால் பயண நேரம் சுமார் 2 முதல் 3 மணி நேரம் குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.
வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும் வகையிலும் மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை வந்தடையும் வகையில் அட்டவணை முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ரயில் சென்னை, தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மானாமதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் என கூறப்படுகிறது
அதே நேரம் இந்த ரயில் கட்டணம் தான் சாதாரண பயணிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. சென்னை – ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயிலில் ஏசி சேர் கட்டணம் 1,400 ரூபாய் என நிர்ணயிக்கப்படும் எனவும், இதுவே எக்ஸிக்யூடிவ் சேர் கட்டணம் 2,400 ரூபாய் என நிர்ணயிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே மின் பாதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயில் இயக்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.