- Home
- Tamil Nadu News
- புத்தாண்டு கொண்டாட ஊருக்கு போறீங்களா? சென்னையில் இருந்து 500+ சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
புத்தாண்டு கொண்டாட ஊருக்கு போறீங்களா? சென்னையில் இருந்து 500+ சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
புத்தாண்டு கொண்டாடுவதற்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சென்னையில் இருந்து 500க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிதாய் பிறக்கும் புத்தாண்டு
2025ம் ஆண்டு முடிவடைந்து 2026ம் ஆண்டு பிறக்க போகிறது. வரும் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டை மக்கள் கோலாகலமாக கொண்டாட உள்ளனர். இதற்காக 30ம் தேதி (நாளை), 31ம் தேதி (நாளை மறுநாள்) சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் சுழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30ம் தேதி (நாளை செவ்வாய்கிழமை) அன்று 240 பேருந்துகளும், 31ம் தேதி (நாளை மறுநாள் புதன்கிழமை) அன்று 255 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்
மேலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 30ம் தேதி (நாளை) மற்றும் 31ம் தேதி (நாளை மறுநாள்) மொத்தம் 55 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் மாதாவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் நாளை மற்றும் நாளை மறுநாள் மொத்தம் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்வது எப்படி?
இந்த வாரத்தில் 30ம் தேதி (செவ்வாய்கிழமை) 11,502 பயணிகளும், 31ம் தேதி (புதன்கிழமை) 8,380 பயணிகளும், 1ம் தேதி (வியாழக்கிழமை) 11,135 பயணிகளும் 2ம் தேதி (வெள்ளிக்கிழமை) 7,501 பயணிகளும் 3ம் தேதி (சனிக்கிழமை) 10,794 பயணிகளும் மற்றும் 4ம் தேதி (ஞாயிறுக்கிழமை) 19,216 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணம் மேற்கொள்ளலாம். இந்த சிறப்பு இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

