சென்னையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை..! இன்றைக்கும் மழை பெய்யுமா.? வெதர் மேன் கொடுத்த அப்டேட் என்ன.?
சென்னையில் இரவு முழுவதும் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான வானிலை நிலவுகிறது.
சென்னையில் கொட்டித்தீர்த்த மழை
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை முதலே குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதையடுத்து இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற இடங்களில் மழையானது கொட்டித்தீர்த்தது. சென்னை வில்லிவாக்கத்தில் அதிகபட்சமாக 5 சென்டி மீட்டர் மழை பதிவு. செங்கல்பட்டு மாவட்டம் விஐடி-யில் 3.7 சென்டி மீட்டரும், மேற்கு தாம்பரத்தில் 3.1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chennai Rain
கன மழை எச்சரிக்கை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை தொடருமா.?
சென்னையில் திடீரென பெய்த மழை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் வெதர் மேன் வெளியிட்டுள்ள பதிவில் இரவு முதல் அதிகாலை வரை நிறைய மேகக் கூட்டங்கள் கடல் பகுதிகளில் இருந்து நகர்ந்து சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் சூழ்ந்துள்ளது. இதனால் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு இது போன்ற திடீர் மழை சென்னையில் தொடரும் என தெரிவித்துள்ளார்.