- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை அடிச்சு ஊத்தப்போகுது! சென்னையில் மீண்டும் மிரட்டப்போகுதா?
தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை அடிச்சு ஊத்தப்போகுது! சென்னையில் மீண்டும் மிரட்டப்போகுதா?
சென்னையில் நேற்று முன்தினம் இரவு எதிர்பாராத விதமாக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேகவெடிப்பால் மழை
தலைநகர் சென்னை பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு பகுதிகளில் எதிர்பாராத வகையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேகவெடிப்பால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
லேசானது முதல் மிதமான மழை
அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.
வெப்பநிலை உயரும்
இன்று முதல் 5ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.