- Home
- Tamil Nadu News
- இடிக்கப்படும் பிராட்வே பேருந்து நிலையம்! 2 வாரத்தில் திறக்கப்படும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்! எந்த இடத்தில் தெரியுமா?
இடிக்கப்படும் பிராட்வே பேருந்து நிலையம்! 2 வாரத்தில் திறக்கப்படும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்! எந்த இடத்தில் தெரியுமா?
சென்னையின் பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, புதியதாகக் கட்டப்படவுள்ளது. இதற்கிடையில், ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் இப்பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

பிராட்வே பேருந்து நிலையம்
பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் முக்கிய பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்து வந்தது. இதை பூக்கடை பேருந்து நிலையம் அல்லது பாரிஸ் என்றும் அழைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இடப்பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பேருந்து நிலையம் கோயம்பேட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் அங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கோயம்பேடு பேருந்து நிலையம்
தற்போது கோயம்பேடு பகுதி நகரின் மையப்பகுதியாக உள்ளதால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது. தற்போது தமிழகத்திற்கு தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்கள் மற்றும் பெரும்பாலான பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
இடிக்கப்படும் பிராட்வே பேருந்து நிலையம்
இந்நிலையில் சென்னையில் மாநகர பேருந்துகள் பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்த பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த இடம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இப்பேருந்து நிலையத்தை இடித்து, அதி நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக மாற்ற சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.823 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையம்
இந்நிலையில், பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணி விரைவில் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதை அடுத்து ராயபுரம் மேம்பாலம் அருகில் உள்ள 3 ஏக்கர் பரப்பில் துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் 7 கோடி ரூபாய் செலவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சீரமைக்கும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், டிக்கெட் கவுண்டர்கள், பாலுாட்டும் அறை, முதலுதவி அறை, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஓய்வறை, உணவு அருந்தும் அறை உள்ளிட்டவை நான்கு கன்டெய்னர் பெட்டிகளில் அமைய உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்காலிக பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஜூன் மாதம் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.