திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.? இனி கவலையே வேண்டாம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதிய பக்தர்கள் தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகள், கூடுதல் படுக்கை அறைகள் மற்றும் குடில்கள் உட்பட பல்வேறு வசதிகள் இங்கு உள்ளன. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் அறைகள் முன்பதிவு செய்யலாம்.
Thiruchendur
தமிழக கோயில்கள்- பக்தர்கள் வருகை
தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கில் கோயில்கள் உள்ளது. அதிலும் பிரசித்து பெற்ற பல கோயில்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், வட பழனி முருகன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஶ்ரீரங்கம் கோயில் என பல கோயில்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா மற்றும் நவம்பர் 7ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் மிகவும் பிரசித்து பெற்றது. எனவே தற்போது திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் செய்தியை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோயில் சூப்பர் அறிவிப்பு
அதன் படி திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கான முன்பதிவு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.48.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பக்தர்கள் தங்கும் விடுதியினை தமிழக முதலமைச்சர் கடந்த வாரம் திறந்து வைத்தார். இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
தங்கும் விடுதி திறப்பு
இதில் குளிர்சாதன வசதிகளுடன் 100 இரண்டு பேர் தங்கும் அறைகள், 9 பேர் தங்கக்கூடிய 16 அறைகள் மற்றும் 7 பேர் தங்கக்கூடிய கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் (Dormitory Blocks).ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கக்கூடிய குடில்கள் (Family Cottages) திருக்கோயில் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், ஒரு குடிலுக்கு நாளொன்றுக்கு வாடகையாக 2,000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு கடந்த 23.10.2024 முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thiruchendur
முன்பதிவு தொடங்கியது
இந்த நிலையில் குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள், 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் போன்றவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அறைகளுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.