- Home
- Tamil Nadu News
- ஆணவக்கொலை! திருமாவை தூது அனுப்பிய அரசு? மறுநாளே உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர்
ஆணவக்கொலை! திருமாவை தூது அனுப்பிய அரசு? மறுநாளே உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர்
நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் அவரது குடும்பத்தினர் இன்று பெற்றுக் கொண்டனர்.

நெல்லை ஆணவப்படுகொலை
திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சித்த மருத்துவமனைக்கு வந்த இளம் மென்பொறியாளர் கவினை அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் என்பவர் வெட்டி படுகொலை செய்து காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். மென்பொறியாளர் கவின் மற்றும் இளம்பெண் சுபாஷினி இருவரும் வெவேறு சமூகத்தினர் என்பதால் கவின் கொலை செய்யப்பட்ட நிலையில், இது ஆணவக் கொலையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெற்றோர் கோரிக்கை
சுபாஷினியின் தாய், தந்தை இருவரும் காவல் உதவி ஆய்வாளர்கள் என்பதால் அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்வார்கள் என்பதால் இருவரையும் பணி நீக்கம் செய்து, இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கவினின் பெற்றோர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் இருவரையும் கைது செய்யும் வரை கவினின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள்
பெற்றோர், உறவினர்கள் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து சுபாஷினியின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது தாயாரையும் கைது செய்ய வேண்டும் என்று கவினின் உறவினர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக கூட்டணிக்கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் நேற்று கவினின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அரசு வீடு உட்பட நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று கவினின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.
தூது சென்ற திருமாவளவன்?
முன்னதாக இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பாளையங்கோட்டை ஆய்வாளர் பாண்டியன் காசி பாண்டியனை பணி நீக்கம் செய்ய வேண்டும், அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்து வந்த நிலையில், திருமாவின் சந்திப்பைத் தொடர்ந்து அவர்கள் உடலைப் பெற்றுக் கொண்டதால், அரசு திருமாவளவன் மூலமாக சமாதானம் ஏற்படும் வகையில் தூது அனுப்பியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.