ஓட்டுநர், நடத்துனர்களுக்கு விடுமுறை கிடையாது.. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை.. போக்குவரத்துத்துறை அதிரடி!
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. மீறி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் போக்குவரத்து துறையால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனி, ஞாயிறு, ஆயுதபூஜை, விஜயதஷமி தொடர் விடுமுறையை முன்னிட்டு தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பேருந்துகளுடன் அக்டோபர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் கூடுதலாக சென்னையிலிருந்து 2,265 சிறப்புப் பேருந்துகளையும் பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய முக்கிய தொழில் நகரங்களிலிருந்து பிற பகுதிகளுக்கு 1,700 சிறப்புப் பேருந்துகளையும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மூன்று இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய பேருந்து நிலையங்களாகும். t bus
இந்நிலையில் வரும் 23ம் தேதி அன்று ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை வருவதால் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை 6 நாட்களுக்கு பயணிகள் அதிக அளவில் வருகை புரிவர். ஆகையால், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. மீறி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.