நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல! எடப்பாடியின் பேச்சுக்கு தரமான பதிலடி கொடுத்த அண்ணாமலை
அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்காது, தனிப்பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை பாஜக ஏமாறும் கட்சி கிடையாது என தெரிவித்துள்ளார்.

அதிமுக, பாஜக கூட்டணி
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதில் இரு கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் சுமார் 8 மாத காலம் இருப்பதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிமுக தொடர்பாக பாஜகவினரும், பாஜக தொடர்பாக அதிமுக.வினரும் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என இரு கட்சி தலைவர்களும் தங்கள் கட்சி உறுப்பினர்கள், தொண்டர்களுக்கு பரஸ்பரம் வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்தனர். ஆனால், தற்போது கூட்டணி கட்சி தலைவர்கள் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தலைவர்கள் இடையே வார்த்தை போர்
அந்த வகையில் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்கும் என அக்கட்சித் தலைவர்களும், அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என அக்கட்சி தலைவர்களும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அண்மையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சரவையில் பிறருக்கு இடம் கொடுக்கும் அளவுக்கு அதிமுக ஒன்றும் ஏமாளி கட்சி கிடையாது. நாங்கள் தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தது கூடுதல் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
கூட்டணி அமைந்ததில் எனது பங்கு கிடையாது
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சென்ன விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “பாஜக யாரையும் ஏமாற்றும் கட்சி கிடையாது. அதே நேரத்தில் யாரிடமும் ஏமாறும் கட்சியும் கிடையாது. தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலை அரிசியல் கட்சி தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டணியில் உள்ள பிற கட்சிகளையும் வளர்த்து தாமும் வளர வேண்டும் என்ற எண்ணம் அனைத்து கட்சிகளுக்கும் வேண்டும். இந்த கூட்டணி அமைந்ததில் எனது பங்கு எதுவும் கிடையாது. அப்படி இருக்கையில் நான் இது தொடர்பாக கருத்து சொல்ல முடியாது.
தலைவர் பதவி வெங்காயம் போன்றது
தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. வெங்காயத்தை உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது. அபோல தான் தலைவர் பதவியும். பதவிக்காக நான் கட்சியில் இருக்கவில்லை. 2021ல் என்ன நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்தேனோ அதே நோக்கத்தோடு தான் தற்போது வரை பயணித்து வருகிறேன். தமிழகத்தில் காவல் துறைக்கு அதிகப்படியான பணிச்சுமை இருக்கிறது. காவலர் அஜித் குமார் மரண வழக்கில் காவல் துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டுள்ளார். காவல்துறையே வாகன எண்களை மாற்றி விசாரணைக்கு செல்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று தெரிவித்துள்ளார்.