- Home
- Tamil Nadu News
- அகவிலைப்படி உயர்வு ரூபாய் 19ஆயிரம் இல்லையா.? 4 ஆயிரம் மட்டுமா.? வெளியான ஷாக் தகவல்
அகவிலைப்படி உயர்வு ரூபாய் 19ஆயிரம் இல்லையா.? 4 ஆயிரம் மட்டுமா.? வெளியான ஷாக் தகவல்
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 110 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி மாத ஓய்வூதியத்துடன் 27% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு ரூபாய் 19ஆயிரம் இல்லையா.? 4 ஆயிரம் மட்டுமா.?
மத்திய அரசு எப்போதெல்லாம அகவிலைப்படியை உயர்த்துகிறதோ அப்போதெல்லாம் மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு இணையாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசு போகுவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 110 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஜனவரி மாத ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி அதிகபட்சமாக 27% உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சரியான விகிதத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்காதது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஊழியர்களுக்கு உரிமை மறுப்பு
தமிழ்நாட்டில் மின்சார வாரியம் உள்ளிட்ட பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எந்தத் தடையுமின்றி வழங்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் கூட அதை செயல்படுத்தாத திமுக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மேல்முறையீட்டை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
குறைவான அகவிலைப்படி உயர்வு
இதனிடையே, அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் சார்பில் தொடரப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த 31-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அகவிலைப்படி உயர்வு வழங்காததற்காக கண்டனம் தெரிவிக்கப்படுமோ? என்று அஞ்சிய தமிழக அரசு, மாதம் ரூ.15 கோடி அளவுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புக்கொண்டது. அதை சில நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் தான் குறைந்த அளவில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
19ஆயிரம் இல்லை- 4ஆயிரம் மட்டுமா.?
அதன்படி, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் 246% அகவிலைப்படி உயர்வு பெற வேண்டிய ஓய்வூதியர்களுக்கு இப்போது 146% அளவுக்கும், ஏழாம் ஊதியக்குழு பரிந்துரைப்படி 53% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியர்களுக்கு இப்போது 14% அளவுக்கும் மட்டும் தான் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அதிகபட்சமாக ரூ.19,000 வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியர்களுக்கு ரூ.4,000 மட்டுமே அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசுத் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
முழு அளவு அகவிலைப்படி வழங்கிடுக
2025-2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு முழு அளவு அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு அதில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
ஆனாலும், உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் இந்த சிக்கலை இன்னும் சில மாதங்களுக்கு தள்ளிவைக்கலாம் என்று திமுக அரசு கருதுகிறது. அவ்வாறு செய்யப்பட்டால் அது தமிழக ஆட்சியாளர்களுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விடும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.