- Home
- Tamil Nadu News
- இஸ்லாமியர்களுக்கு பாஜகவில் இடமில்லை.! என் உழைப்பு குப்பையில் வீசப்பட்டுள்ளது- அலிஷா அப்துல்லா வேதனை
இஸ்லாமியர்களுக்கு பாஜகவில் இடமில்லை.! என் உழைப்பு குப்பையில் வீசப்பட்டுள்ளது- அலிஷா அப்துல்லா வேதனை
தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. அண்ணாமலை ஆதரவாளரான அலிஷா அப்துல்லா, கட்சியில் முஸ்லிம்களுக்கு இடமில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பாஜகவில் நாளுக்கு நாள் உட்கட்சி மோதல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆதரவாக ஒரு பிரிவினரும், தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் ஆதரவாக ஒரு பிரிவினரும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக பாஜகவில் பல்வேறு பிரிவுகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நயினார் நாகேந்திரனின் தனது மகன் நயினார் பாலாஜிக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் அமைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதே போல ஆன்மீக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவுக்கு பிரபல ஜோதிடர் ஷெல்வி, கலை மற்றும் கலாசார பிரிவுக்கு பெப்சி சிவக்குமார், வழக்கறிஞர் பிரிவுக்கு குமரகுரு, தொழில்துறை வல்லுநர் பிரிவுக்கு சுந்தர் ராமன், மருத்துவ பிரிவுக்கு பிரேம்குமார், அமைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிர்வாகிகள் பட்டியலில் அண்ணாமலை ஆதரவு நிர்வாகிகளுக்கு பதவி ஒதுக்கப்படவில்லையென கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நான் பாஜகவில் இணைய அண்ணாமலை மற்றும் மோடிக்காக மட்டுமே இணைந்தேன், ஏனென்றால் அவர்களின் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது, கட்சியில் மதம் இல்லை! சாதி இல்லை! வெறும் கடின உழைப்பு மட்டுமே போதும். ஆனால் பாஜக நிர்வாகிகள் பட்டியல் தொடர்பான அறிவிப்பு இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு ஆளுமையான எனக்கு இதைப் பார்ப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்த கட்சிக்காக நான் 3 ஆண்டுகள் இரவும் பகலும் கடுமையாக உழைத்துள்ளேன்! ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கட்சியில் 12 ஆண்டுகள் இருக்கும் திரு. கேசவன் விநாயகம் எந்த நன்மையும் செய்யவில்லை. எனது வேலையைக் முனைவைத்த போது அவர் என்னை அவமதித்து வெளியேறினார்!
பாஜகவில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்பதை நிரூபிக்கிறது. எனது கடின உழைப்பு அனைத்தும் அழிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது! ” 28 நிர்வாகிகளில் ஒரு கிறிஸ்தவர்களோ முஸ்லிம்களோ இல்லை! என அலிஷா அப்துல்லா வேதனையோடு பகிர்ந்துள்ளார்.