- Home
- Tamil Nadu News
- பட்டாசு வெடிக்க தொடங்கிய மக்கள்.! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட காற்று மாசு.! சென்னையில் மட்டும் இவ்வளவா.?
பட்டாசு வெடிக்க தொடங்கிய மக்கள்.! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட காற்று மாசு.! சென்னையில் மட்டும் இவ்வளவா.?
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் அரசு விதித்த நேரக்கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்துள்ளது. ஆலந்தூர், அரும்பாக்கம் போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்து, நுண் துகள்களின் அளவு உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் சொந்த ஊரில் உறவினர்களோடும், நண்பர்களோடும் தீபாவளி பண்டிகை கொண்டாட மக்கள் சென்றுள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர்.
இதன் காரணமாக சென்னை நகரமே காலியாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பட்டாசு தான், அந்த வகையில் நேற்றைய தினமே பெரும்பாலான இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.
இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசு கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு காலையில் 6 முதல் 7 மணி வரை என ஒரு மணி நேரமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நேரத்தையும் மீறியும் மக்கள் பட்டாசுகளை வெடித்து வருகிறார்கள், இதனால் சென்னை நகரில் காற்று மாசு அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக அரும்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு உச்சத்தில் உள்ளது. அந்த வகையில் இன்று காலை முதல் மக்கள் பட்டாசு வெடிக்க தொடங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் காற்றில் தரம் மாசடைய தொடங்கியது.
நேற்று சென்னை மாநகரில் சராசரியாக காற்றின் தரக் குறியீடு 109 ஆகவும் காற்றின் நுண் துகள்கள் PM 2.5 மற்றும் PM 10 ஆகியவை பெருவாரியாக இருந்தது .இன்று காலை நிலவரப்படி ஆலந்தூரில் 95 , அரும்பாக்கத்தில் 106 , கொடுங்கையூரில் 68 , மணலியில் 75 , பெருங்குடியில் 7 , வேளச்சேரியில் 71 என காற்று மாசு பதிவாகியுள்ளது.
இதேபோல் செங்கல்பட்டில் 115 , காஞ்சிபுரத்தில் 82 , கும்மிடிப்பூண்டியில் 96 , கோவையில் 108 ஆக காற்று தரம் பதிவாகியுள்ளது. தற்போதே காற்று மாசு மோசமான நிலையில் உள்ள நிலையில் நேரம் செல்ல செல்ல காற்று தரம் படிபடியாக மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.