- Home
- Tamil Nadu News
- மோடி, அமித்ஷாவை சந்திக்க திட்டமா? திடீரென டெல்லிக்கு பறந்த எடப்பாடி- காரணம் என்ன.?
மோடி, அமித்ஷாவை சந்திக்க திட்டமா? திடீரென டெல்லிக்கு பறந்த எடப்பாடி- காரணம் என்ன.?
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் அதிமுக கூட்டணி குறித்து திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையா அல்லது வேறு காரணமா?

DMK Alliance And ADMK alliance in Tamil Nadu : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில்,கூட்டணி தொடர்பான திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது வரை திமுக கூட்டணி உறுதியாக உள்ள நிலையில், அதிமுகவோடு எந்த கட்சியும் தற்போது வரை தங்களது கூட்டணியை உறுதி செய்யவில்லை.
ஆனால் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார். எனவே தங்கள் கூட்டணியில் தவெகவை இழுக்க தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அதிமுக கூட்டணியில் தவெக.?
ஆனால் இதற்கு பிடி கொடுக்காத விஜய், தங்கள் தலைமையில் தான் கூட்டணி என தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதன் மூலம் தனது பலத்தை அறியவும் விஜய் முடிவு செய்துள்ளார்.
எனவே தவெகவை தவிர்த்து திமுகவிற்கு எதிராக உள்ள கட்சிகளை ஒன்று சேர்க்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். எனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் இணையும் என கூறப்படுகிறது.
அதிமுக தலைமையில் கூட்டணி.?
அதற்கு ஏற்றார் போல எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணியே இல்லையென தெரிவித்து வந்தவர், தேர்தல் நேரத்தில் கூட்டணி தொடர்பாக முடவு எடுப்போம் என தெரிவித்துள்ளார். எனவே அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாக உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இந்த திடீர் பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிமுக தரப்பில் கூறும்போது டெல்லியில் 3 மாடி கொண்ட அதிமுக அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழா காணொளி காட்சி மூலம் தான் நடத்தப்பட்டது. எனவே அந்த கட்டிடத்தை பார்வையிட செல்வதாக கூறப்படுகிறது.
டெல்லிக்கு சென்ற எடப்பாடி
மற்றொரு தரப்போ தமிழகத்தில் தொடரும் கொலை தொடர்பாகவும், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக குடியரசு தலைவரை சந்தித்து புகார் அளிக்க சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல் விமர்சகர்களோ எடப்பாடியின் இந்த டெல்லி பயணம் பாஜக தலைவர்களை சந்திக்கும் திட்டம் தான் எனவும், வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு காய் நகர்த்துவதற்காக இப்போதே டெல்லி சென்று அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் சென்று இருக்கிறார்.