- Home
- Tamil Nadu News
- இருட்டில் இருந்த உறவு வெளிச்சத்திற்கு வந்துருச்சு.! ஓபிஎஸ்- ஸ்டாலின் சந்திப்பை விளாசிய பொள்ளாச்சி ஜெயராமன்
இருட்டில் இருந்த உறவு வெளிச்சத்திற்கு வந்துருச்சு.! ஓபிஎஸ்- ஸ்டாலின் சந்திப்பை விளாசிய பொள்ளாச்சி ஜெயராமன்
மீண்டும் அதிமுகவில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்தும், பாஜகவின் ஆதரவும் கிடைக்காததால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அதிமுக இதனை விமர்சித்துள்ளது.

அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தில் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், 3 முறை முதலமைச்சர் பொறுப்பையும் வகித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் பல பிளவுகளாக பிரிந்தது.
சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி என பிரிந்துள்ளது. இதனால் வாக்குகள் சிதறி கடந்த 10 தேர்தல்களில் அதிமுகவிற்கு தோல்வியே கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைய எவ்வளவோ முயற்சி செய்தார்.
எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இணைய தயார் எனவும் அறிவித்தார். ஆனால் எதற்கும் எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்கவில்லை. பாஜகவாவது தன்னை அதிமுகவில் சேர்த்து வைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் பாஜகவும் கை விட்டு விட்டது.
இதனையடுத்து தான் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்பை வெளியிட்ட மாலையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
திமுக கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம் இணைவாரா என அரசியல் விமர்சகர்கள் விவாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஓ.பி.எஸ்- ஸ்டாலின் சந்தித்ததை அதிமுக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஒபிஎஸ் சந்திப்பு வாயிலாக, இருட்டில் இருந்த உறவு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திமுக.,வுடன் ஒபிஎஸ் எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதற்கு சட்டசபையில் அவர் பேசிய பேச்சுக்களே சாட்சி என கூறினார்.
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு எடப்பாடி பழனிச்சாமி என மக்கள் பேசி கொண்டுள்ளனர். இன்றைக்கு ஏற்பட்டு வருகின்ற எந்த அரசியல் மாற்றமும் எடப்பாடி பழனிச்சாமி கரங்களை வலுப்படுத்தும் வகையில்தான் நடந்து வருகிறது.
தினந்தோறும் லாக்கப் மரணங்கள், பாலியல் பலாத்காரங்களை தொடர்ந்து வனத்துறையிலும் தற்போது தவறுகள் நடக்க ஆரம்பித்துள்ளன. தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலையில் மக்கள் அழுது தவித்து கொண்டிருக்கிறார்கள் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.