- Home
- Tamil Nadu News
- கைதில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை! தவெகவின் ஆதவ் அர்ஜுனா எடுத்த அதிரடி முடிவு!
கைதில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை! தவெகவின் ஆதவ் அர்ஜுனா எடுத்த அதிரடி முடிவு!
ஆதவ் அர்ஜூனா, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசை விமர்சிப்பது குற்றமல்ல என குறிப்பிட்டுள்ளார்.

புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வழக்கில் தவெக சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பதிவு
இதனிடையே தவெக தோ்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கரூர் சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில், வன்முறையில் ஈடுபட்டு, புரட்சியை உண்டாக்க வேண்டும் என கருத்துகளை பதிவிட்டார். அந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சில மணி நேரங்களில் அதை நீக்கிவிட்டார். இந்த பதிவின் அடிப்படையில் ஆதவ் அர்ஜூனா மீது வன்முறையைத் தூண்டுவது, இரு பிரிவினரிடையே பகையை தூண்டுவது, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது, வதந்தியை பரப்புவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆதவ் அர்ஜூனா
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணையின் போது நீதிபதி செந்தில்குமார் ஆதவ் அர்ஜூனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். கைதுக்கு பயந்து ஆதவ் அர்ஜூனா டெல்லியில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி ஆதவ் அர்ஜூனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நான் பதிவிட்ட எக்ஸ் தள பதிவை உடனடியாக நீக்கிவிட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் நான் அந்த கருத்தை பகிரவில்லை. பொதுமக்களிடையே குழப்பம் ஏற்படுத்தும் நோக்கமோ அரசை விமர்சிப்பதற்கான தனிப்பட்ட நோக்கமோ எதுவும் இல்லை. எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் குறித்து காவல்துறை முழுமையாக கவனம் செலுத்தவில்லை.
சென்னை உயர் நீதிமன்றம்
தமிழக அரசின் நிலைமையை விமர்சிப்பது மட்டும் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் எந்த குற்றமாகாது. மாநிலத்தை கவிழ்க்க அல்லது இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு சதித் திட்டத்திலும் நான் ஈடுபடவில்லை. தீங்கு விளைவிக்கும் சக்திகளுடன் உடந்தையாக நான் இருப்பதாக எந்த வகையிலும் எனது பதிவு பிரதிபலிக்கவில்லை. ஆளும் ஆட்சியை விமர்சிப்பது எந்தவொரு கிரிமினல் குற்றம் அல்ல. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் என் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பது மட்டுமல்லாமல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.