அரபிக்கடலில் உருவாகும் புயல்... வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை- தமிழகத்தில் மழை எச்சரிக்கை- வானிலை மையம்
அரபிக்கடலில் புயல் சின்னமும், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா.? மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாமா.? வேண்டாமா என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை
வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் புயல் சின்னம் உருவாகியிருப்பதன் காரணமாக தமிழகத்தில் மழை தொடர்பாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.
அரபிக்கடலில் புயல்
இது இன்று காலை (20-10- 2023) 0830 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும் வலுவடைந்து 22-10-2023 மாலை தீவிர புயலாக நிலவக்கூடும். இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 24-10- 2023 வாக்கில் தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு நிலை
இதே போல நேற்று காலை (19-10-2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது 23-10-2023 வாக்கில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
வட கிழக்கு பருவமழை .?
மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்தநிலையில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும்.
தமிழகத்தில் மழை எச்சரிக்கை
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.10.2023: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.10.2023 முதல் 24.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்க கடல் பகுதிகள்:
20.10.2023: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21.10.2023: மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தபடுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.