எங்க மறைந்திருந்தாலும் தூக்க படை ரெடி..! புஸ்ஸியை பிடிக்க தனிப்படை
41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்ஜாமீன் கோரியுள்ள அவரை போலீசார் நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர், நடிகர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் கரூர் வேலுசாமிபுரத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். 16 பெண்கள், 10 குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழக்க, பலர் காயமடைந்தனர். விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியதால், போதிய பாதுகாப்பு இன்றி நெரிசல் ஏற்பட்டதாகவும், விஜய் வேண்டுமென்றே பல மணி நேரம் தாமதமாக வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கரூர் மாவட்ட செயலாளர் முதல் குற்றவாளியாகவும், கட்சியின் பொதுச் செயலாளர் என். புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் மீதும் கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையின் தமிழ்நாடு பொது பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகள் 105 (குற்றமற்ற கொலை), 110 (கொலை முயற்சி), 125 (மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தல்), 223 (பொது அதிகாரி உத்தரவு மீறல்) மற்றும் 336 (அச்சமூட்டும் செயல்) ஆகிய 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் உள்ளிட்ட மற்றொரு நிர்வாகியும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே புஸ்ஸி ஆனந்த் மற்றும் சி.டி. நிர்மல் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் மீது எந்த தவறும் இல்லை, போலீஸ் மற்றும் நிர்வாகப் பிழைகளே காரணம் என தெரிவித்துள்ளனர். தங்களை கைது செய்தால் கவுரம் பாதிக்கப்படும் எனவும் வாதிட்டுள்ளனர். மேலும் ஒரு நபர் கமிஷன் விசாரணை அறிக்கை வரும் வரை தங்களை கைது செய்யக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) ஒத்திவைத்துள்ளார். இந்த பரபரப்பான சூழலில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல் ஆகியோரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில்3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இன்றோ அல்லது நாளைக்குள்ளோ புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.