தவெக Vs திமுக.. யாருடன் கூட்டணி? கையை தூக்குங்க! கடுப்பான தலைகள்.. என்ன நடந்தது?
டெல்லியில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணி வைப்பதா? அல்லது விஜயின் தவெகவுடன் கூட்டணி வைப்பதா? போன்றவற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கூட்டணி முடிவு
தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து தீவிர விவாதம் நடந்து வரும் நிலையில், டெல்லியில் தமிழ்நாடு எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த சந்திப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராகுல் காந்தி சந்திப்பு
இந்த சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கட்சியின் அகில இந்திய ஸ்ட்ராடஜிஸ்ட் ஆன பிரவீன் சக்ரவர்த்தியும் இதில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. கூட்டம் தொடங்கியது கூட்டணி குறித்து பொது வெளியில் பேசப்பட்ட விவகாரங்களை முன்வைத்து கார்கே அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கார்கே கடும் எச்சரிக்கை
“கூட்டணி பற்றி பேசுங்கள் என்று யாரையும் நாங்கள் சொல்லவில்லை.ஆளுக்கு என்ன வேண்டுமானாலும் பேசுவது சரியல்ல. கட்சி தலைமை பார்த்துக்கொள்கிறது” என அவர் தெளிவாக எடுத்துரைத்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு கே.சி.வேணுகோபாலும் ஆதரவு தெரிவித்ததாக கூறினார். மேலும், “திமுக கூட்டணி வேண்டாம்” என நினைப்பவர்கள் யாராவது உள்ளார்களா என்று கேட்கப்பட்டபோது பெரும்பாலும் அமைதி நிலவுவதாகவும், வெளிப்படையாகவும் எதிர்ப்பு எதுவும் பதிவாகவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி காங்கிரஸ் கூட்டம்
திமுக கூட்டணியைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் இல்லையென உறுதி செய்யப்பட்ட பின்னர், “தொகுதி பகிர்வு, கூடுதல் தொகுதி கோரிக்கை போன்றவற்றை தலைமை பார்த்துக்கொள்ளும் என்றும், ஆட்சியில் பங்கு விவகாரங்களை தேர்தல் முடிவுக்கு பிறகு பேசலாம்” என்றும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
திமுக காங்கிரஸ் கூட்டணி
பெரும்பாலானோர் “திமுக கூட்டணி தான் தற்போதைய சூழலில் சிறந்த தேர்வு” என ஒருமித்தமாக தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில கூடுதல் தொகுதிகள் கோர வேண்டும் என்று கூறினாலும், அதனை கட்சி மேலிடம் பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, கட்சியின் உத்தி, கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து ஊடகங்களில் அல்லது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என உயர் கட்டளை கடுமையாக அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
தவெக கூட்டணி வாய்ப்பு
“கார்கே இறுதி முடிவு எடுக்கும் வரை வெளியில் பேசக் கூடாது” என்றும், கட்சியின் சுயமரியாதை மற்றும் ஒற்றுமை முக்கியம் என்றும் தலைமை வலியுறுத்தியது தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் சில பிரிவுகள் தமிழக வெற்றிக் கழகம் (TVK) உடன் கூட்டணி அமைக்க விருப்பம் காட்டிய நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் திமுக கூட்டணியைத் தொடரும் என்பதே மேலோங்கி வருவதாகத் தெரிகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள்
அதே நேரத்தில், தமிழகத்தில் அதிக செல்வாக்கு, கூடுதல் இடங்கள் மற்றும் வலுவான அதிகாரப் பங்கு குறித்து காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தும், மாநில நிலவரத்தை ஆய்வு செய்து மேலும் ஒரு குழுவை அனுப்ப வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவழியாக காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடரும் என்பதையே தற்போது வெளியான தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

