தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் திமுக கூட்டணியில் தொடர அக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் கூட்டணி குறித்து பொதுவெளியில் கருத்து சொல்லவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் கருத்தால் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு உருவாகி உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேர்தலில் கூட்டணி அமைப்பது, எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது, அமைச்சரவையில் பங்கு கேட்பது உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். குறிப்பாக 50 முதல் 60 தொகுதிகளில் போட்டியிட வேண்டும், 3 முதல் 6 அமைச்சர் பொறுப்புகளை கேட்டுப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இவை அனைத்திற்கும் மேலாக சில மூத்த நிர்வாகிகள் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் ராகுல், மல்லிகார்ஜூனா கார்கே கூட்டாக இணைந்து இதற்கு கண்டிப்பான முறையில் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டணி தொடர்பாக பொது வெளியில் யாரும் கருத்து கூறக்கூடாது என்றும் கூறி ராகுல் கடிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. திமுக கூட்டணியில் தொடர்வதோடு அதிகத் தொகுதிகளை கேட்டு பெறுவது தொடர்பாக தலைமை பேசி முடிவு செய்யும். இது தொடர்பாக யாரும் முரண்பாடான கருத்துகளை சொல்லக் கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில்,, “இன்றைய ஆலோசனைக் கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது. கூட்டணி தொடர்பாக யாரும் பொது வெளியில், சமூக வலைதளங்களில் கருத்து சொல்லக் கூடாது என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்டு பெறுவது தொடர்பாக தலைமை பார்த்துக் கொள்ளும். தலைமை எடுக்கக் கூடிய முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார்.

இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Scroll to load tweet…