- Home
- Tamil Nadu News
- 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி.. 6 நாட்களுக்குள் முடிக்க ஆசிரியர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி.. 6 நாட்களுக்குள் முடிக்க ஆசிரியர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு
தமிழ்நாடு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளன. ஏப்ரல் 20-க்குள் திருத்தும் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11ம் தேதி தொடங்கி நடைபெற்றது. தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 11, ஆங்கில மொழிப்பாடம் மார்ச் 16, கணிதம் மார்ச் 25, அறிவியல் மார்ச் 30, ஏப்ரல் 2 தேதி சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாட தேர்வு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வுகளை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 8,82,806, தனித்தேர்வர்கள் 25,801 பேர், சிறைவாசிகள் 395 பேர் என மொத்தம் 9,09,002 தேர்வர்கள் 4,219 தேர்வு மையங்களில் தேர்வு எழுதப்பட்டது. இந்த தேர்வு பணிகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 47,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4,950-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
10ம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 10,877 மாணவர்களும். ஆங்கிலம் பொதுத் தேர்வை 10,369 மாணவர்களும், கணிதம் பொதுத் தேர்வை 11,284 மாணவர்களும், அறிவியல் தேர்வு எழுத 11,341 மாணவர்களும், சமூக அறிவியல் தேர்வை 11,228 மாணவர்களும் தனித்தேர்வர்களும் எழுதவில்லை. ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற விருப்பமொழி பாடத்தேர்வை 118 பேர் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத் துறை இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை செய்து முடிக்கத் தேவையான ஆசிரியர்கள் எண்ணிக்கையை, பாடப் பிரிவு, பயிற்று மொழி வாரியாக சரியாக கணக்கிட்டு உடனே அவர்களை பணியில் இருந்து விடுவித்து முகாம் பணிக்கு அனுப்ப வேண்டும். தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழி விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும்.
மதிப்பீட்டுப் பணிகளை தாமதமின்றி குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இதற்காக, தங்களது நிர்வாகத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து 10-ம் வகுப்பு பாடம் நடத்தும் தகுதியான பாட ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்து, தேர்வாளர்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்க வேண்டும். எந்த பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாத வகையில் கண்காணிக்க வேண்டும். மதிப்பீட்டுப் பணிக்கு அனுப்பும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதிக்குள் நியமன ஆணையை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதன்மை தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள், ஏப்ரல் 10-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட வேண்டும். அரசுத் தேர்வுத் துறை வழங்கியுள்ள விடைக்குறிப்பில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெரிவிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 13-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் உதவி தேர்வாளர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தம் செய்ய வேண்டும். இந்த பணிகளை 20-ம் தேதிக்குள் அதாவது 6 நாட்களில் நடத்தி முடிவுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மே20ம் தேதி வெளியாகும் எனவும் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

