- Home
- Tamil Nadu News
- 10 , 11ம் வகுப்பு மாணவர்களுக்கு! அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
10 , 11ம் வகுப்பு மாணவர்களுக்கு! அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும். தேர்வு எழுதாத மற்றும் தோல்வியடைந்த மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

பள்ளி மாணவர்கள்
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியானது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7,92,494 மாணவர்கள் எழுதினர். இதில் 3,73,178 மாணவர்களும், 4,19,316 மாணவிகளும் அடங்கும். இந்த தேர்வில் 3,47,670 மாணவர்களும், 4,05,472 மாணவிகள் என மொத்தம் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றனர். 39,352 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். மேலும், 10,049 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தும் தேர்வு எழுத வரவில்லை.
12ம் வகுப்பு துணைத் தேர்வுகள்
இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் இந்தாண்டே கல்லூரி சேரும் வகையில் துணைத் தேர்வுகள் நடத்தி முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தனர். அதன்படி ஜூன் 25-ம் தேதி தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
10 மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வு
அதேபோல் 10, 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியானது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 6.20 சதவிகித மாணவர்களும், 11ம் வகுப்பில் 8.81 சதவிகித மாணவர்களும் தோல்வி அடைந்தனர். இதனையடுத்து 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 4ம் தேதி முதல் 11ம் தேதி வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 4ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. 10 மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் குறித்து அரசு தேர்வுத் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்குநர்
இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா வெளியிட்ட செய்திக் குறிப்பில்: 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட ) தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை (ஹால்டிக்கெட்) நாளை (25-ம் தேதி) அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அப்போது, விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும்.
11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு
11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான தேதி, நாள் தொடர்பான விவரங்களை தனித் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு இல்லாமல் எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு
10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்பு நடைபெறும் பள்ளியிலேயே செய்முறைத் தேர்வு வரும் 26 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியை அணுகி தெரிந்துக் கொள்ளலாம். 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு காலஅட்டவணை www.dge.tn.gov.in அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.