- Home
- Tamil Nadu News
- Tamilnadu Government: 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம்! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா? தமிழக அரசு அறிவிப்பு!
Tamilnadu Government: 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம்! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா? தமிழக அரசு அறிவிப்பு!
Tamilnadu Government: தமிழகத்தில் மாவட்டம் தோறும் நீர்நிலைகளை சிறப்பாக பராமரிப்போருக்கான முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நீர் உலக இயக்கத்தின் ஜுவநாடி. அதனால் தான் நீரின்றி அமையாது உலகு என்பர். பருவமழை காலத்தில் நீரை சரியான நேரத்தில் சேமிக்க தவரும் பட்சத்தில் கடும் வறட்சியை சந்திக்க நேரிடுகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, நீர் நிலைகளை தூர்வாரி, மழைநீரை சேகரித்து நீர் மேலாண்மை செய்வதற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 22,051 சிறுபாசன ஏரிகளில் முதற்கட்டமாக நடப்பாண்டில் ரூ.500 கோடி மதிப்பில் 5 ஆயிரம் சிறுபாசன ஏரிகளை புனரமைக்க அறிவிப்பு வெளியானது.
இதன்படி, சிறுபாசன ஏரிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தி தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்துதல், உபரி நீர்போக்கி (கலிங்கு), மதகு போன்ற அனைத்துக் கட்டமைப்புகளையும் பழுதுபார்த்தல் அல்லது புனரமைத்தல், இணைப்பு வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல் ஆகியவற்றை பொதுமக்கள் பங்கேற்புடன் செயல்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நீர்நிலைகளை புனரமைப்பதால், நீர்நிலைகளின் கொள்திறன் அதிகரிக்கும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். வேளாண் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படும். உபரி நீர் வீணாவதையும் தடுக்கும். சிறுபாசன ஏரிகளின் கொள்ளளவினை மேம்படுத்தி புனரமைப்பதன் மூலம் வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் தடுக்கும். பேரிடர் மேலாண்மை முயற்சிகளுக்கு இத்திட்டம் முக்கிய பங்களிப்பு வழங்கும்.
இத்திட்டம், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சொந்த நிதி ஆதாரம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் மூலமாகவும் மற்றும் மீதமுள்ள சிறுபாசன ஏரிகளுக்கு அரசு நிதி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் நிதியின் மூலமாகவும் பணிகள் நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், நீர் நிலைகளை சிறப்பாக பாதுகாக்கிற 100 பேருக்கு முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும். ஒரு நபருக்கு 1 லட்சம் ரூபாய் வீதம் 1 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அரசாணையில்: கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், வனத்துறை அமைச்சர், “தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், நீர்நிலைகளை பாதுகாப்பில் சிறப்பாக பணியாற்றி வரும் அரசு சாரா நிறுவனங்கள், தனியார் 100 பேருக்கு முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, நிர்வாக ஒப்புதல் வழங்கிய தமிழக அரசு, தமிழ்நாடு பருவகால மாற்ற திட்ட நிதியில் இருந்து இந்த விருதுக்கான நிதியை வழங்கும் வகையில், கருத்துரு அனுப்பும்படி, சுற்றுச்சூழல் மற்றும் பருவகால மாற்றத்துறை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் விருதுத் தொகை ரூ.1 கோடி, நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழுக்காக ரூ.2 லட்சம், நிகழ்ச்சிக்காக ரூ.6 லட்சம், இதர செலவாக ரூ.2 லட்சம் என ரூ.1.10 கோடியை வழங்கும்படி கருத்துரு அனுப்பினார். இந்த கருத்துருவை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, மாவட்டம் தோறும் ஒருவர் என 38 மாவட்டத்துக்கு 38 பேருக்கு விருது வழங்கும் வகையில், ரூ.38 லட்சம் மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.4 லட்சம் என ரூ.42 லட்சத்தை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.