ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? வெளியான புதிய தகவல்!
திருச்சி ஸ்ரீரங்கத்தில் 11.10 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 80% நிறைவடைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் எட்டு பேருந்துகள் நிறுத்தும் வசதி, கடைகள், பல்நோக்கு அரங்கம் மற்றும் உணவகம் போன்ற வசதிகள் இடம்பெறும்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற ஶ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இறங்கிச் செல்ல ஏதுவாக பேருந்து நிலையம் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த பகுதியில் மட்டும் சுமார் 1 லட்சத்து 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் ஸ்ரீரங்கத்தில் இதுவரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகளுக்கு என தனியாக பேருந்து நிலையம் இல்லை.
ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம்
ஆகையால் ஸ்ரீரங்கத்தில் உள்ளூர் பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பெயரில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
11.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம்
இதனை தொடர்ந்து ஶ்ரீரங்கத்தில் ரூபாய் 11.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. கடந்த 2023 டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. 2024 ஜனவரி மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. சில காரணங்களால் பணிகள் தாமதமானது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. தற்போது 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 80% பணிகள்
இதுவரை 80% பணிகள் முடிவடைந்துள்ளன. முதல் தளத்திற்கான கான்கிரீட் கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்து, சுகாதார வளாகங்கள், கடைகள், பூச்சு வேலை, மின் மற்றும் பிளம்பிங் வேலைகள் மேற்கொள்ளப்படும். திட்டமிட்டபடி பார்த்தால், பணி ஆணை வழங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் முடிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு முன்பே பணிகள் முடிவடையும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் எட்டு பேருந்துகளை நிறுத்தும் வசதி இருக்கும். இது நகர மற்றும் புறநகர் பேருந்துகளை கையாளுவதற்கு ஏற்றதாக இருக்கும். பேருந்து நிலையத்தில் ஊழியர்களுக்கான அறைகள், சுகாதார வளாகம் மற்றும் சுமார் 22 கடைகள் இருக்கும். முதல் தளத்தில் 260 பேர் அமரக்கூடிய பல்நோக்கு அரங்கம் மற்றும் 140 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவுக்கூடம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.