லாரி லாரியாக வந்து சேர்ந்த பரிசுப் பொருட்கள்: கோலாகலமாக தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கொடி அசைக்க கோலாகலமாகத் தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாத தொடக்கத்தில் மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் தினமான செவ்வாய் கிழமை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு வென்ற வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
அந்த வகையில் இன்று மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாகத் தொடங்கி உள்ளது. வருவாய்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து வைக்க வீரர்கள் உறுதிமொழி ஏற்போடு போட்டி தொடங்கியது.
மொத்தமாக 10 சுற்றுகளாக நடத்தப்படும் இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும் 50 முதல் 70 வீரர்கள் களம் இறக்கப்படுகின்றனர். முதலாவதாக கோவில் காளை அவிழ்க்கப்ட்டதும் வரிசையாக அடுத்தடுத்த காளைகள் களம் இறக்கப்படுகின்றன. மொத்தமாக 1000 காளைகளும், 900 வீரர்களும் போட்டியில் பங்கேற்கின்றனர்.
jallikattu
போட்டியில் அதிக காளைகளை பிடிக்கும் வீரருக்கு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும், இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கு பைக்கும் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதே போன்று களத்தில் அதிக நேரம் நின்று விளையாடி முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டரும், இரண்டாம் இடம் பிடிக்கும் காளையின் உரிமையாளருக்கு நாட்டு பசு, கன்று வழங்கப்பட உள்ளது.