- Home
- Tamil Nadu News
- சென்னை
- நீலகிரி, சேரன் ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பு! பின்வாங்க மறுக்கும் ரயில்வே!
நீலகிரி, சேரன் ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பு! பின்வாங்க மறுக்கும் ரயில்வே!
நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கு முடிவில் இருந்து பின்வாங்க தெற்கு ரயில்வே மறுத்து வருகிறது.

Reduction Sleeper Coaches in Express Trains
இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ரயிலில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகிறது.
ரயில்களின் ஸ்லீப்பர் பெட்டிகளில் அதிகளவு மக்கள் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அண்மை காலமாக ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பு
இதேபோல் தமிழ்நாட்டில் இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஸ்லீப்பர் பெட்டிகளை குறைக்கப்போவதாக ரயில்வே அறிவித்து இருந்தது. அதாவது சென்னை சென்ட்ரல் - கோவை சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் மெயில் ரயில்களில் தலா 2 ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் அடுத்த மாதம் முதல் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்தது.
நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்
மேலும் சென்னை - மங்களூரு எக்ஸ்பிரஸ், சென்னை-மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ், திருச்சி - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டிகளும், சென்னை - திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ்< சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - மும்பை, கன்னியாகுமரி புதுடெல்லி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இணைக்கபட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
பின்வாங்க மறுக்கும் ரயில்வே
இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படாது என தெற்கு ரயில்வே தெரிவித்தது.
அதே வேளையில் சேரன், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரம் ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் திட்டமிட்டபடி குறைக்கப்படும் என்பதில் ரயில்வே உறுதியாக உள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை எம்.பி. கோரிக்கை
இந்நிலையில், சேரன், நீலகிரி ரயில்களிலும் ஸ்லீப்பர் பெட்டிகளை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ''தெற்கு இரயில்வேயின் 16 இரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.
எங்கள் எதிர்ப்பின் காரணமாக நெல்லை, பொதிகை ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டது திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதனை வரவேற்கிறேன். இதேபோல் சேரன் நீலகிரி திருவனந்தபுரம் மெயில் விரைவு ரயில்கள் உட்பட மற்ற 14 ரயில்களிலும் ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்த முடிவை திரும்பப்பெற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
ரயில்களில் 12 ஸ்லீப்பர் பெட்டிக்ள் இருந்தாலே டிக்கெட் கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. இப்போது பல்வேறு ரயில்களில் 9 அல்லது 10 ஸ்லீப்பர் பெட்டிகள் தான் உள்ளன. அதிலும் ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்து ஏசி பெட்டிகளை சேர்ப்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ரயில் பெட்டிகளை குறைப்பதில் இருந்து ரயில்வே பின்வாங்க மறுப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.