- Home
- Tamil Nadu News
- சென்னை
- வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு ரத்து? பயணிகள் ஷாக்! தெற்கு ரயில்வே விளக்கம்!
வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு ரத்து? பயணிகள் ஷாக்! தெற்கு ரயில்வே விளக்கம்!
வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

Is non vegetarian food not allowed on Vande Bharat train?
இந்தியாவில் சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் நாட்டிலேயே அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மற்ற ரயில்களை விட அதிவேகமாக செல்வதாலும், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு முன்கூட்டியே செல்ல முடியும் என்பதாலும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
நாட்டின் முக்கியமான நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே உணவுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படும். வந்தே பாரத் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே அசைவ உணவு வேண்டுமா? இல்லை சைவ உணவு வேண்டுமா? என்பதை பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம்.
வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?
பயணிகள் தேர்வு செய்யும் உணவு வந்தே பாரத் ரயில் பயணத்தின்போது அவர்களுக்கு வழங்கப்படும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவை, மைசூரு திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில்களில் காலை உணவு பட்டியலில் இருந்து அசைவ உணவு நீக்கப்பட்டுள்ளதாகவும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே ''அசைவ உணவு மதியம் மற்றும் இரவு உணவுக்கு மட்டுமே கிடைக்கும்'' என்று அறிவிப்பு கூறப்படுவதாகவும் தகவல் வெளியானது.
ரயில்வேக்கு குவிந்த கண்டங்கள்
வந்தே பாரத் ரயில்களில் மூன்று வேளையும் அசைவ உணவு கிடைத்து வந்த நிலையில், காலையில் அசைவ உணவு ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவல் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனி நபர்களின் உணவு உரிமையில் தலையிட ரயில்வேக்கு அதிகாரம் இல்லை என பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்து செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பாக பரவும் தகவல் பொய்யானது என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
தெற்கு ரயில்வே விளக்கம்
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், ''வந்தே பாரத் ரயில்களில் காலையில் அசைவ உணவு வழங்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறானது. காலையிலும் அசைவ உணவு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இன்று (அதாவது நேற்று மே 31ம் தேதி) 1,302 அசைவ காலை உணவுகள் வழங்கப்பட்டுள்ளது'' என்று விளக்கம் அளித்துள்ளது.