- Home
- Tamil Nadu News
- சென்னை
- இப்படி செஞ்சி பாருங்க! இனி தெரு நாய்கள் தொல்லை இருக்காது! அரசுக்கு ஐடியா கொடுத்த உயர்நீதிமன்றம்!
இப்படி செஞ்சி பாருங்க! இனி தெரு நாய்கள் தொல்லை இருக்காது! அரசுக்கு ஐடியா கொடுத்த உயர்நீதிமன்றம்!
சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு மட்டும் 20,000 தெருநாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன.

Chennai HC Orders TN Government To Control Street Dogs
இந்தியா முழுவதும் தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் பெண்கள், குழந்தைகளை கடித்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தெரு நாய்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. பொதுமக்களை கடித்துக் குதறும் தெரு நாய்களால் சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. நாய்களின் அட்டூழியம் தாங்க முடியாததால் இரவு நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் நிம்மதியாக சாலையில் நடமாட முடியவில்லை.
தெரு நாய்கள் தொல்லை
மிக முக்கியமாக தலைநகர் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்கள் மக்களை பாடாய்படுத்தி வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவி வருகிறது. தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் தெரு நாய்களுக்கு சென்னை மாநகராட்சி ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி முழுவதும் 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
இதற்காக மொத்தம் 30 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவார்கள். நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி அதற்கான அடையாளமாக நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. கடந்த ஆண்டில் 20,000 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது ''தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது மட்டுமின்றி அவற்றை பாதுகாக்க தனி காப்பகம் அமைக்க வேண்டும். நாய்க்கடி சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே வேளையில் நாய்களை துன்புறுத்தக் கூடாது'' என்று அரசிடம் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு என்ன?
தலைநகர் டெல்லியிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், டெல்லி-NCR பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் உடனடியாகப் பிடித்து, அவற்றைச் சிறப்பு காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த நாய்களை தெருக்களிலோ, பொது இடங்களிலோ மீண்டும் விடக்கூடாது என்று நீதிபதிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.