- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னையில் மேகத்தை உடைத்து மொத்தமாக கொட்டிய கனமழை! 1 மணி நேரத்தில் 16 செமீ! வானிலை நிபுணர்கள் வார்னிங்!
சென்னையில் மேகத்தை உடைத்து மொத்தமாக கொட்டிய கனமழை! 1 மணி நேரத்தில் 16 செமீ! வானிலை நிபுணர்கள் வார்னிங்!
சென்னையில் ஒரு மணி நேரத்தில் 16 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. மேக வெடிப்பு ஏற்பட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Chennai Cloudburst: 16 cm Rain in One Hour
கேரளாவில் தொடர்ந்து கொட்டி வரும் தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் பரவாலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதே வேளையில் மலைப்பகுதியை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் போதிய அளவு மழை இல்லை. சென்னையில் வெயில் கடுமையாக வாட்டி எடுத்தது. எப்போதாவது ஒருமுறை மழை பெய்த நிலையில், கனமழையை சென்னை மக்கள் எதிர்பார்த்து வந்தனர்.
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை
இந்நிலையில், சென்னையில் நேற்று அதீத கனமழை கொட்டித் தீர்த்தது. வடபழனி, கிண்டி, தி.நகர், கோடம்பாக்கம், பாரிமுனை, நெற்குன்றம், கொளத்தூர், காசிமேடு, வளசரவாக்கம், தண்டையார்பேட்டை, புழல், அமைந்தகரை என சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அம்பத்தூரு, கொரட்டூர், கத்திவாக்கம், திருவெற்றியூர் என புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மக்கள் திக்குமுக்காடி போனார்கள்.
ஒரு மணி நேரத்தில் 16 16 செ.மீ மழை
சென்னையின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. மணலியில் ஒரு மணி நேரத்தில் 16 செ.மீ மழை பெய்துள்ளது. கொரட்டூரில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக எடுத்துக் கொண்டால் மணலியில் 26 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. சென்னையில் பெய்த தொடர் மழையால் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 4 விமானங்கள் பெங்களூரு திரும்பின. மேலும் 15க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையிலும் தாமதம் ஏற்பட்டது.
சென்னையில் வேக வெடிப்பா?
சென்னையில் ஒரே இரவில் அதுவும் ஒரு மணி நேரத்தில் 16 செ.மீ மழை பெய்துள்ளது சென்னைவாசிகளை மகிழ்ச்சியிலும், அச்சத்தியிலும் ஆழ்த்தியுள்ளது. மேக வெடிப்பு காரணமாக சென்னையில் இவ்வளவு மழை கொட்டியதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓரிடத்தில் ஒரே நேரத்தில் மொத்தமாக மழை கொட்டுவது ஆபத்து என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே வேளையில் சென்னையில் மேக வெடிப்பு ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை.
மேக வெடிப்பு என்றால் என்ன?
மேக வெடிப்பு (Cloudburst) என்பது திடீரென ஒரு குறிப்பிட்ட பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் அதிக அளவு மழை பெய்யும் நிகழ்வைக் குறிக்கிறது. அதாவது சில நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்குள் 100 மி.மீ அல்லது அதற்கு மேல் மழை பெய்வதே மேக வெடிப்பாகும். மேகங்களில் திரண்டிருக்கும் நீராவி வேகமாக மழையாக மாறி, ஒரு சிறிய பகுதியில் குவிந்து விழுவதால் ஏற்படுகிறது.