சென்னை டூ கோவை.. செப்டம்பர் 3 வரை கொட்டித்தீர்க்கப் போகும் மழை.. வானிலை அப்டேட்!
தமிழ்நாட்டில் செப்டம்பர் 3ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Weather: Heavy Rain Alert Till Sept 3
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கோவை, தென்காசி, மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது மழை பெய்கிறது. மற்ற மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.
தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், தமிழ்நாட்டின் செப்டம்பர் 3ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஒடிஷா அருகே வலுவிழந்தது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று மணிக்கு, 50 கி.மீ வேகத்தில் பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை பெய்யுமா?
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் செப்டம்பர் 3ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறிய வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இன்று வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும் தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில், இன்றும் , நாளையும், மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் , இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.