- Home
- Tamil Nadu News
- சென்னை
- #Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! நாகேந்திரன் உட்பட 17 பேர் மீதான! சென்னை ஐகோர்ட் அதிரடி!
#Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! நாகேந்திரன் உட்பட 17 பேர் மீதான! சென்னை ஐகோர்ட் அதிரடி!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரில் 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது புதிய வீட்டின் அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக கொலை நடைபெற்றதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரவுடிகள் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
26 பேர் குண்டர் சட்டம்
இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில்கொண்டு 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக கூறினர்.
சென்னை உயர்நீதிமன்றம்
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கைது செய்யப்பட்டதற்கும், குண்டர் சட்டத்தில் அடைப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கும் இடையேயான கால தாமதத்தை கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர். குண்டர் சட்டத்தில் கைது செய்த தகவலை தெரிவித்தல், ஆவணங்களை குற்றவாளிகளுக்கு தருவது, உத்தவுக்கான அனுமதி ஆகியவற்றில் காலதாமதம் மற்றும் குளறுபடிகள் குறித்து காவல் துறையிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது. அதே சமயத்தில், இவர்களின் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்ட காரணத்தினால் மட்டுமே இவர்களுக்கு ஜாமீன் வழங்கி விட கூடாது. வழக்கின் தீவிரத்தை முழுமையாக கருத்தில் கொண்டே ஜாமீன் மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.